ADDED : மே 21, 2025 04:55 AM

சென்னை:
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
ஆட்சிக்கு வந்தால், அடுத்த நாளே 'நீட்' தேர்வை ரத்து செய்வோம் என, வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்த தி.மு.க., புதிய சட்டத்தை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியது. அத்துடன் கடமையை முடித்துக் கொண்டது.
அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில், சட்டப்போராட்டம் நடத்துவோம் என, கடந்த ஏப்.,4ல் வசனம் பேசிய முதல்வர் ஸ்டாலின், அதன் பின் 50 நாட்களாகியும், உச்ச நீதிமன்றத்தில் எந்த வழக்கையும் தொடரவில்லை.
மாணவர்கள்தான் நாட்டின் எதிர்காலத் துாண்கள். அவர்களை 'நீட்' என்ற ஒரு தேர்வு தொடர்ந்து, பலி வாங்குவதை அனுமதிக்க முடியாது.
எனவே, 'நீட்' தொடர்பான நாடகங்கள் அரங்கேற்றுவதை விட்டு விட்டு, நீட் தேர்வை ரத்து செய்ய, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுக்க வேண்டும்.
மத்திய அரசும் திறந்த மனதுடன் நீட் தேர்வின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து, அதை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்சம் தமிழகத்திற்கு மட்டுமாவது விலக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

