கும்பாபிஷேகத்துக்கு செல்லாத முதல்வர் கிறிஸ்துமஸ் விழாவுக்கு செல்வது ஏன்? முன்னாள் கவர்னர் தமிழிசை கேள்வி
கும்பாபிஷேகத்துக்கு செல்லாத முதல்வர் கிறிஸ்துமஸ் விழாவுக்கு செல்வது ஏன்? முன்னாள் கவர்னர் தமிழிசை கேள்வி
ADDED : ஜூன் 09, 2025 01:39 AM

மதுரை: “மதுரையில் ஜூன் 22ல் நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு, தி.மு.க.,வினர் ரகசியமாக வருவர்,” என பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை கூறினார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியுள்ளதாவது:
மதுரை, சங்கம் வைத்து தமிழை வளர்த்த இடம். அதனால் எங்களை, 'சங்கிகள்' என்கின்றனர்; அதுகுறித்து கவலைப்படவில்லை.
சங்கம் வைத்த இடத்தில் சங்கிகளின் சக்தி அதிகமாகிறது. மதுரையில் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றது, கட்சியினர் அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது வருகை தி.மு.க., கூட்டணிக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
யாரெல்லாம் உண்மையான தி.மு.க., என நாம் கருதுகிறோமோ, அவர்கள் அனைவருக்கும் இறை நம்பிக்கை உள்ளது; பக்தி உள்ளது. அமைச்சர் துரைமுருகன் உட்பட தி.மு.க.,வினர் பலரும் கடவுளை ரகசியமாக வழிபடுகின்றனர்.
நம்பிக்கை இருக்குமானால், கடவுளை யாரும் ஒளிந்து மறைந்து கும்பிட வேண்டியதில்லை. வெளிப்படையாகவே கும்பிடலாம். அதைத்தான் அனைவரும் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் 3,000 கோவில்களில் நடந்த கும்பாபிஷேகங்களில் ஒன்றில் கூட முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றதில்லை. ஆனால், கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளுக்கு விடாமல் செல்கிறார்.
அனைத்து கோவிலுக்கும் நாங்கள் தான் தீபம் ஏற்றினோம் என, கோவிலில் தீபம் ஏற்றுவதற்கு கூட 'ஸ்டிக்கர்' ஒட்டும் கலாசாரத்தை தி.மு.க., கொண்டு வந்துள்ளது. இதை கடவுள்கூட மன்னிக்க மாட்டார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது. திருநெல்வேலி மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாகிறது.
இன்று வரை, குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை. அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கிலும், துரும்பை கூட தமிழக போலீஸ் கண்டுபிடிக்கவில்லை.
தி.மு.க., கூட்டணியில் இருப்பதால், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையால், எதை கண்டித்தும் ஒரு போஸ்டர் கூட ஒட்டமுடியவில்லை.
கண்ணகியால் நீதி கிடைத்த மண் மதுரை; 2026ல் தமிழக மக்களுக்கு, மதுரை மண்ணில் இருந்து நீதி கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

