எம்.எல்.ஏ.,க்கள் கொடுத்த 10 கோரிக்கைகளை அரசு நிராகரிப்பது ஏன்? ஸ்டாலின் - இ.பி.எஸ்., காரசார விவாதம்
எம்.எல்.ஏ.,க்கள் கொடுத்த 10 கோரிக்கைகளை அரசு நிராகரிப்பது ஏன்? ஸ்டாலின் - இ.பி.எஸ்., காரசார விவாதம்
UPDATED : ஏப் 02, 2025 06:51 AM
ADDED : ஏப் 02, 2025 02:20 AM

சென்னை:''உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில், நிதி ஆதாரத்திற்கு உட்பட்டு, சாத்தியப்படக்கூடிய திட்டங்களை தான் நிறைவேற்ற முடியும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - திண்டுக்கல் சீனிவாசன்: 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் மாவட்ட குழுக்கள் வாயிலாக, எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கைகளை கொடுத்தனர். சில கோரிக்கைகளை சாத்தியமில்லை என்று கூறி விட்டனர்.
இதனால், எம்.எல்.ஏ.,க்கள், பொது மக்களின் அதிருப்தியை சந்திக்க வேண்டியுள்ளது. கோரிக்கைகளை நிராகரித்து, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை இக்கட்டான நிலையை ஏற்படுத்துகிறது.
அமைச்சர் வேலு: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்ப்பது கிடையாது. சில பணிகள் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை என்று சொல்லப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ், 10 கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்தோம். பல கோரிக்கைகளுக்கு, நிதி அதிகமாக தேவைப்படுவதாக கூறி சாத்தியமில்லை என்று கூறி விட்டனர்.
நான் என் தொகுதிக்கு அனுப்பிய, 10 பணிகளில், இரண்டு பணிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளன. மற்ற பணிகளில் காலதாமதம் செய்கின்றனர்.
என் மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் கொடுத்த கோரிக்கைகளும் சாத்தியமில்லை என்று கூறியுள்ளனர். மக்கள் கேட்கும் கோரிக்கையைதான் எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரைத்துள்ளனர். உரிய நிதி ஒதுக்கீடு செய்து, அவற்றை நிறைவேற்ற வேண்டும்.
அமைச்சர் வேலு: ஒவ்வொருவரும், 10 பணிகளை தந்தனர். அவற்றை நிறைவேற்றுவதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு கிடையாது. அதற்கு உதாரணம் சொல்கிறேன். நான் என் தொகுதிக்கு, 10 கோரிக்கைகள் அளித்தேன்.
அதில், சென்னை கலைவாணர் அரங்கம் போன்று திருவண்ணாமலையில் அமைத்து தர கேட்டேன். நிலம் இல்லை என்று கூறி, என் கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.
இப்போது வேறு பணியை எழுதிக் கொடுத்துள்ளேன். அரசை பொறுத்தவரை அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் முதல்வர் சமமாக பார்க்கிறார். மாற்றி எழுதி கொடுத்தால், முதல்வர் தனி கவனம் செலுத்தி, கட்டாயம் செய்து தருவார். ஆகும் கட்சி, ஆகாத கட்சி என்று இல்லாமல், சரிசமமாக முதல்வர் ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கிறார்.
பழனிசாமி: நான், 10 கோரிக்கைகளை எழுதி கொடுத்தேன். சாத்தியமில்லை என்றவுடன் மீண்டும் கோரிக்கைகளை எழுதி கொடுத்தேன்; அதையும் சாத்தியமில்லை என்று கூறி விட்டனர். பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை கூட சாத்தியமில்லையா?
முதல்வர் ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவர் சொல்தை நான் மறுக்கவில்லை. இந்த திட்டத்தை பொறுத்தவரை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். நானே, அதை தலைமை ஏழு ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்.
ஆறு மாதத்திற்கு முன், எதிர்க்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இந்த திட்டத்தில் நிறைவேற்றி தருவதற்கான பணிகள் குறித்து பட்டியல் எதுவும் தரவில்லை. மீண்டும் மீண்டும் கேட்ட பின், அவர் பட்டியல் தந்தார்.
சாத்தியமில்லாத திட்டம் என்றால், அதை நிறைவேற்ற சாத்தியமில்லை என பதில் தரப்படுகிறது.
எனவே, நிதிக்கு உட்பட்டு சாத்தியப்படக்கூடிய திட்டங்களை தான் நிறைவேற்ற முடியும். அந்த பணிகளை நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். பள்ளி கட்டடங்கள் பற்றி எதிர்க்கட்சி தலைவர் சொன்னார். அது, துறையின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணி. இவ்வாறு விவாதம் நடந்தது.