தேசிய கூட்டுறவு இணையம் நெல் கொள்முதல் செய்வது ஏன்? அமைச்சர் விளக்கம்
தேசிய கூட்டுறவு இணையம் நெல் கொள்முதல் செய்வது ஏன்? அமைச்சர் விளக்கம்
ADDED : பிப் 04, 2025 03:27 AM
சென்னை : 'தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தான், தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் நெல் கொள்முதல் செய்கிறது; இரண்டிலும் ஒரே விலை வழங்கப்படுகிறது' என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
தமிழகத்தில், 2022 முதல், மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டம், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் முகவராக வாணிப கழகம் செயல்பட்டு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்கிறது.
டெல்டா மாவட்டங்களில் தான் நெல் கொள்முதல் திட்டம் முதலில் துவக்கப்பட்டது. டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் விவசாயிகள் நலன் கருதி, இந்த பணி விரிவுபடுத்தப்பட்டது. இந்த மாவட்டங்களில், 2007 - 08ல் இருந்து கூட்டுறவு சங்கங்களும் நெல் கொள்முதல் செய்ய, மாநில அரசு அனுமதி வழங்கியது.
கடந்த 2012 மார்ச்சில் மத்திய அரசு எழுதிய கடிதம் அடிப்படையிலும், தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணைய மேலாண் இயக்குனரின், 2013 ஏப்ரல் கடிதத்தின் அடிப்படையிலும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையம் திறந்து, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய, 2014ல் அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, 2016ல் இருந்து தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம், நெல் கொள்முதல் செய்ய, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கிறது.
டெல்டா அல்லாத மாவட்டங்களில், நுகர்பொருள் வாணிப கழகத்தால் திறக்கப்படும் கொள்முதல் நிலையங்கள் தவிர, தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையத்திற்கு, ஒரு சில இடங்களில் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
வாணிப கழகம் சார்பில் தான், தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் நெல் கொள்முதல் செய்கிறது.
இவை இரண்டு நடத்தும் நிலையங்களிலும், ஒரே விலையில் தான் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழக அரசு, விவசாயிகளுக்கு வழங்கும் ஊக்கத்தொகையும் அவ்வாறே வழங்கப்படுகிறது.
இதை ஏதும் அறியாமல் அல்லது அறிந்தும் அறியாமல், பா.ம.க., நிறுவனர் கருத்து தெரிவித்திருப்பது சரியல்ல.
இவ்வாறு சக்கரபாணி கூறியுள்ளார்.