பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? தமிழக அரசுக்கு உதயகுமார் கேள்வி
பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? தமிழக அரசுக்கு உதயகுமார் கேள்வி
ADDED : ஏப் 18, 2025 07:35 PM
சென்னை:'சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தும், பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க, தி.மு.க., அரசு தயங்குவது ஏன்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும், அமைச்சர் பொன்முடி பேசியது போன்ற இழிவான பேச்சை, இது வரை தமிழினம் கேட்டதில்லை. பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பொன்முடியின் இழிவான பேச்சை கேட்ட பிறகும், முதல்வர் ஸ்டாலின் எப்படி சகித்துக் கொள்கிறார் என்பது வியப்பாக உள்ளது. தமிழக மக்கள் கொதித்து போய் உள்ளனர். குற்றம் செய்வது மட்டுமல்ல; குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதும் குற்றம்தான். பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து, உடனடியாக நீக்கியிருக்க வேண்டும்.
ஜெயலலிதா இப்போது முதல்வராக இருந்திருந்தால், இது போன்ற தவறு செய்தவர், அமைச்சர் பதவியிலிருந்து மட்டுமல்ல, கட்சி அடிப்படை உறுப்பினராகக்கூட இருந்திருக்க முடியாது. இதற்கு பிறகும், எதுவும் நடக்காதது போல், முதல்வருடன் சட்டசபையில், பொது நிகழ்ச்சிகளில், பொன்முடி கலந்து கொள்கிறார். இது வெட்கி தலைகுனிய வேண்டிய நிகழ்வு. இப்படியே விட்டால், 1,000 பொன்முடிகள் முளைத்து வரலாம்.
'யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல' என உயர் நீதிமன்றம் கூறிய பிறகும், பொன்முடி மீது நடவடிக்கை எடுக்காமல், முதல்வர் ஸ்டாலின் மவுனமாக இருக்கிறார். இதனால், பொன்முடி கருத்தை, முதல்வர் ஏற்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. பொன்முடிக்கும், தி.மு.க., அரசுக்கும் பாடம் புகட்ட, வரும் சட்டசபை தேர்தலில், மக்கள் தி.மு.க.,வை புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

