ADDED : ஜூலை 09, 2025 01:51 AM

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி துவக்கியுள்ள, 'மக்கள் யாத்ரா' வெற்றி பெற, வி.சி., தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தது, தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை உருவாக்கிய நிலையில், அவர், முதல்வர் ஸ்டாலினை திடீரென நேற்று சந்தித்து பேசினார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழகம் முழுதும், 'மக்கள் யாத்ரா' பயணத்தை மேட்டுப்பாளையத்தில் நேற்று முன்தினம் துவக்கினார்.
இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், “மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பழனிசாமியின், 'மக்கள் யாத்ரா' பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்,” என்றார்.
'தி.மு.க., கூட்டணியில் வி.சி., அங்கம்வகிக்கும் நிலையில், அ.தி.மு.க., வெற்றிக்கு அவர் எப்படி வாழ்த்து தெரிவிக்கலாம்; தேர்தலில் தி.மு.க., தோல்வி பெற வேண்டும் என, திருமாவளவன் கருதுகிறாரா?' என, தி.மு.க.,வினர் தலைமையிடம் கேள்வி எழுப்பினர்.
இது கூட்டணியில் சலசலப்பை உருவாக்கியது. இதற்கிடையில், 'தி.மு.க., கூட்டணியில், ராமதாஸ் அணியின் பா.ம.க., இடம்பெற வாய்ப்புள்ளது; பா.ம.க., இரண்டு அணிகளாக பிரிந்தது, தி.மு.க.,விற்கு சாதகம்' என, மூத்த அமைச்சர்கள் தங்களுக்கு நெருக்கமான எம்.எல்.ஏ.,க்களிடம் பேசி உள்ளனர்.
இது உண்மையா என அறிய, திருமாவளவன் விரும்பினார்.
இதற்காக தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் நேற்று சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் உள்ள பள்ளி - கல்லுாரி, மாணவ - மாணவியர் விடுதிகள், 'சமூக நீதி விடுதிகள்' என இனி அழைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் தேர்தல் கூட்டணி குறித்து பேசி உள்ளார்.
அப்போது தி.மு.க., கூட்டணியில், கூடுதலாக சில கட்சிகள் இடம் பெற்றாலும், இட ஒதுக்கீட்டில், வி.சி.,க்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படும் என, முதல்வர் உறுதி அளித்து உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.