ADDED : பிப் 14, 2024 01:21 AM
சென்னை:''நகர்ப்புற உள்ளாட்சிகளுடன், அருகில் உள்ள ஊராட்சிகளை, பொதுமக்கள் கருத்து கேட்டு, இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் நேரு தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - தளவாய்சுந்தரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில், 53 பேரூராட்சிகள் உள்ளன. தற்போது 25 ஊராட்சிகளை, பேரூராட்சிகளுடன் இணைப்பதாக தகவல் வந்துள்ளது. அரசு என்ன முடிவு எடுத்துள்ளது. ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர் பெரியசாமி: மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைக்க, கடந்த காலத்தில் தீர்மானம் போடப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து முடிவு செய்ய, அரசு கமிட்டி அமைத்துள்ளது. அக்கமிட்டி மக்களிடம் கருத்து கேட்கும்.
அமைச்சர் நேரு: சேர்க்காமல் இருக்க முடியாது. மாநகராட்சி, நகராட்சி அருகில் உள்ள ஊராட்சிகளை இணைக்கலாம் என, ஊராட்சிகளில் தீர்மானம் போடப்பட்டு, தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு இணைக்கப்படும். இதற்காக துறை செயலர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, துாத்துக்குடி மாநகராட்சி அருகில் உள்ள ஊராட்சியில், 40,000 மக்கள் உள்ளனர். அதை மாநகராட்சியுடன் இணைப்பதை தவிர, வேறு வழியில்லை. நுாறு நாள் வேலை திட்டம் இருக்காது என்பதால், இணைக்க ஒப்புதல் தர மறுக்கின்றனர்.
ஆனால், தாம்பரம் நகராட்சியில் அருகில் உள்ள ஊராட்சிகளை இணைக்க வேண்டும் என, அவர்களாகவே வலியுறுத்தி உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பதவி காலம் முடியும் வரை இணைக்கப்படாது. பொது மக்கள் கருத்து கேட்டு, எது தேவையோ அந்த ஊராட்சிகள் மட்டும் இணைக்கப்படும்.
தளவாய்சுந்தரம்: பேரூராட்சிகளோடு ஊராட்சிகளை இணைக்கின்றனர்.
அமைச்சர் நேரு: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்றவற்றின் அருகில் உள்ள ஊராட்சிகள், தேவைப்பட்டால் இணைக்கப்படும். மாநகராட்சியுடன் இணைக்கப்படும் போது, மாநகராட்சியில் உள்ள வசதிகளை ஏற்படுத்த முடியும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

