எதற்காக 'நீட்' தேர்வு விலக்கு? தமிழகத்திற்கு டில்லி 4 கடிதம்
எதற்காக 'நீட்' தேர்வு விலக்கு? தமிழகத்திற்கு டில்லி 4 கடிதம்
UPDATED : செப் 21, 2024 04:03 AM
ADDED : செப் 20, 2024 08:42 PM

சென்னை:''டில்லி செல்ல உள்ள முதல்வர், பிரதமரை சந்தித்து, 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்துவார். நீட் விலக்கு சட்ட மசோதா தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட கேள்விகளுக்கு, உரிய விளக்கம் அளித்துள்ளோம்,'' என, அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
தமிழக சட்டக் கல்லுாரிகளில், முதுநிலை சட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களில், 420 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை, அமைச்சர் ரகுபதி நேற்று வழங்கினார். பின், அவர் அளித்த பேட்டி:
'ஆன்லைன் ரம்மி' சட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரங்களை, தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாது. அதை கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ, மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட, 'நீட்' தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக, ஜனாதிபதியிடம் இருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு, நான்கு கடிதங்களை அனுப்பியது. அனைத்துக்கும் உரிய பதில் அளித்துள்ளோம்.
இப்பதில்களால், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டிய சூழல், மத்திய அரசுக்கு நிச்சயம் ஏற்படும். நான்காவது கடிதத்தில், 'நீட் தேர்வு இல்லை என்றால் கல்வித் தரம் குறைந்து விடும். நீட் தேர்வை பல மாநிலங்கள் ஏற்றுக் கொண்டபோது, தமிழகம் மட்டும் விலக்கு கேட்பது ஏன்' என, கேட்டிருந்தனர்.
அதற்கு, 'நீட் இல்லாமலேயே இந்திய அளவில் தலைசிறந்த மருத்துவர்களை, தமிழகம் தந்துள்ளது. தமிழக அரசு பாடத்திட்டத்தின் கல்வித்தரம் உயர்வானது. எனவே நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை' எனப் பதில் அனுப்பினோம்.
நீட் தேர்வு சட்டத்தில், எங்களுக்கு முரண்பாடு இருப்பதால், எங்களுக்கு அது தேவை இல்லை எனக் கூறி உள்ளோம். முதல்வர் டில்லியில் பிரதமரை சந்திக்கும்போது, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்துவார்.
இவ்வாறு அவர் கூறினார்.