பா.ம.க.,வில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? ஜி.கே.மணிக்கு அன்புமணி 'நோட்டீஸ்'
பா.ம.க.,வில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? ஜி.கே.மணிக்கு அன்புமணி 'நோட்டீஸ்'
UPDATED : டிச 19, 2025 06:58 AM
ADDED : டிச 19, 2025 06:53 AM

சென்னை: பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே.மணிக்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே தொடரும் மோதல் காரணமாக, இருவரும் தனித்தனியாக செயல்படுகின்றனர். ராமதாஸ் ஆதரவாளர்களை அன்பு மணியும், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாசும், கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர்.
ராமதாஸ் பக்கம் இருக்கும் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தான், தங்களுக்குள் பிரச்னை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என அன்புமணி குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், 'கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து, உங்களை ஏன் நீக்கக் கூடாது?' என விளக்கம் கேட்டு, அன்புமணி தரப்பில் இருந்து ஜி.கே.மணிக்கு நேற்று 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
பா.ம.க.,வைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி எம்.எல் .ஏ., மணி தொடர்ந்து , கட்சி நலனுக்கும், கட்சி தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்.
அவரது அண்மை கால செயல்பாடுகள் எல்லை கடந்தவையாக இருக்கின்றன. அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்க, பா.ம.க., ஒழுங்கு நடவடிக்கை குழு, சென்னையில் கூடியது. அதில், ஜி.கே.மணியின் கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து, அவரிடம் விளக்கம் கேட்க தீர்மானிக்கப்பட்டது.
பா.ம.க., தலைவர் அன்புமணி மீது பொய் குற்றச்சாட்டுகளையும், அவதுாறுகளையும் கூறி வருகிறார். இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பா.ம.க.,வில் இருந்து அவரை ஏன் நீக்கக் கூடாது என்பது குறித்து, ஒரு வாரத்தில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க., அரசு பரிகாரம் தேட வேண்டும்
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள கையேட்டில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, 2024 - 25ம் ஆண்டில் தமிழக வேளாண் துறை உற்பத்தி மதிப்பு, 51,862.76 கோடி ரூபாயாக குறைந்து விட்டது. விவசாயிகளின் வருமானம் குறைந்து விட்டதை, புள்ளி விபரம் அம்பலப்படுத்துகிறது. தி.மு.க., அரசு இதை மறைத்து, தமிழகம் செழித்து விட்டதாக மோசடி நாடகத்தையும், வீண் கொண்டாட்டங்களையும் நடத்தி, ஏமாற்ற முயற்சிக்கிறது.
விவசாய வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை தி.மு.க., அரசு மேற்கொள்ள தவறியதன் விளைவுதான், இந்த வீழ்ச்சி. மோசடிகளை அரங்கேற்றுவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் தி.மு.க., அரசு, விவசாயத் துறை வீழ்ச்சியை ஒப்புக்கொண்டு, கடந்த கால பாவங்களை போக்க, பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும்.
- அன்புமணி
தலைவர், பா.ம.க.,

