ADDED : மே 10, 2026 12:28 AM

மதுரை: ''தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படுவார் என நாங்கள் நம்புவதால் தான் அவருக்கு ஆதரவு அளித்துள்ளோம்,'' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் எம்.ஏ. பேபி தெரிவித்தார்.
மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மதவாத சக்திகளுக்கு எதிராக விஜய் செயல்படுவார் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது. அதனால் தான் த.வெ.க.,வுக்கு ஆதரவு அளித்துள்ளோம்.
மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில், வி.சி.க., மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஆலோசித்து, த.வெ.க.,வுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்தோம்.
இதை தி.மு.க.,தலைமையிடம் தெரிவித்துவிட்டோம். தி.மு.க., வுடன் எங்களின் நட்புறவு தொடர்கிறது.
மக்கள் தீர்ப்புக்கு எதிராக, பின்வாசல் வழியாக அதிகாரத்தை கைப்பற்ற, பா.ஜ., நினைக்கிறது. அதற்கேற்ப கவர்னர் செயல்படுகிறார்.
நாங்கள் குதிரை பேரத்திற்கு எதிரானவர்கள். தமிழகத்தில் குதிரை பேரம் நடப்பதாக வரும் குற்றச்சாட்டுகளுக்கு, கவர்னரின் தாமதமே காரணம்.
இவ்வாறு பேபி கூறினார்.
