ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க தாமதம் ஏன்?
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க தாமதம் ஏன்?
ADDED : செப் 24, 2024 07:29 AM

சென்னை : 'பேரணிக்கு அனுமதி அளிக்க விதிகளை ஏற்படுத்திய பின்னும், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி அளிப்பதில் தாமதம் ஏன்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
விஜயதசமியை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ்., சார்பில், ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி அளிக்கக்கோரி, திருப்பூர் மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., சார்பில், போலீசாருக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லாததால், அம்மாவட்டங்களை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள் ஜோதி பிரகாஷ், சேதுராஜ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இம்மனுக்கள், நீதிபதி ஜெயச்சந்திரன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், “ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் அளித்த விண்ணப்பங்களை பரிசீலிக்கிறோம். வரும் 29ம் தேதிக்குள் முடிவெடுத்து தெரிவிக்கப்படும்,” என்றார்.
மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி, “விதிகள் வகுக்கப்பட்ட பின்னும் பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை,” என்றார்.
இதையடுத்து, 'விதிகளை வகுத்தும் அனுமதி அளிப்பதில் தாமதம் ஏன்' என, நீதிபதி கேள்வி எழுப்பினார். விசாரணையை, வரும் 26ம் தேதிக்கு தள்ளி வைத்து, விண்ணப்பங்களின் முடிவை அறிக்கையாக தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.