ஒப்பந்த பணியாளர்கள் அதிகரிப்பு ஏன்? செலவு விபரங்களை கேட்கிறது அரசு
ஒப்பந்த பணியாளர்கள் அதிகரிப்பு ஏன்? செலவு விபரங்களை கேட்கிறது அரசு
ADDED : பிப் 16, 2024 01:02 AM
சென்னை:சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், ஒப்பந்த முறை பணி நியமனங்கள் திடீரென அதிகரித்துள்ள நிலையில், அது தொடர்பான செலவு விபரங்களை அனுப்ப, அரசு உத்தரவிட்டுள்ளது.
சி.எம்.டி.ஏ.,வில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, காலியான பணியிடங்களை நிரப்ப மேலதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு மாற்றாக, பல்வேறு நிலைகளில் வெளியாட்களை ஒப்பந்த முறையில் அதிக செலவில், பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக, சி.எம்.டி.ஏ.,வில், உதவி திட்ட அலுவலர்கள், துணை திட்ட அலுவலர்கள், மூத்த திட்ட அலுவலர் நிலையில் பெரும்பாலான பணியிடங்கள் காலியாக உள்ளன.
தகுதியான நபர்கள் இருந்தாலும், இப்பணியிடங்களை முடக்கும் நோக்கத்தில், ஒப்பந்த முறையில் வல்லுனர்கள் நியமிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது.
இதேபோன்று, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பல்வேறு நிலையில், 20க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பாமல், ஓய்வுபெற்ற அலுவலர்களை அதிக செலவில் மேலதிகாரிகள் நியமித்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், அரசு நிறுவனங்களில் ஒப்பந்த முறை நியமனங்கள் வகையில் ஏற்படும் கூடுதல் செலவுகள் குறித்து, அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.
இதுகுறித்து, துறை வாரியாக விபரம் திரட்ட, மனிதவள மேலாண்மை துறை உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை, சி.எம்.டி.ஏ., -- டி.டி.சி.பி., வீட்டுவசதி வாரியம், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றுக்கு கடிதம் எழுதி உள்ளது.
அதில், 'ஒப்பந்த முறையில் மற்றும் தொகுப்பு ஊதியத்தில், தினகூலி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நியமன விபரங்களை அனுப்ப வேண்டும்.
இந்த நியமனங்களுக்கான செலவு குறித்த புள்ளி விபரங்களை, பட்டியல் வடிவில் உடனடியாக அனுப்ப வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.