ADDED : நவ 24, 2024 02:30 AM

சென்னை:மகனின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காகவே, சட்டசபை பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த கட்சியின் ஆய்வு கூட்டத்திற்கு பின், என் மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும் கட்சியினருக்கு வழங்கினேன். பின், என் குடும்ப நண்பர் நயினார் நாகேந்திரனை சந்தித்து, அழைப்பிதழை வழங்கினேன்.
சொந்த குடும்ப நிகழ்ச்சிக்காக, குடும்ப நண்பரை சந்தித்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் பழனிசாமி, அ.தி.மு.க.,வை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. பழனிசாமிக்கும் எனக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியான தகவல், வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.