கனிமவள கொள்ளையை தடுக்க தயக்கம் ஏன்? - தீர்ப்பாயம் கேள்வி
கனிமவள கொள்ளையை தடுக்க தயக்கம் ஏன்? - தீர்ப்பாயம் கேள்வி
ADDED : மார் 15, 2024 12:42 AM
சென்னை:'அதிகாரம் இருந்தும் கனிமவள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்' என, தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பி உள்ளது.
கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், அனுமதியின்றி இயங்கிய செங்கல் சூளைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வரும் தீர்ப்பாயம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட கலெக்டர் அடங்கிய சிறப்பு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதை தடுக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனாலும், கனிம வளங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? அதில் என்ன தயக்கம்' என, அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் சரமாரி கேள்விகள் எழுப்பப்பட்டன.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அனுமதி பெறாத செங்கல் சூளைகளுக்காக, கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவது குறித்து குழு அமைத்து ஏன் விசாரிக்கவில்லை.
குழு அமைக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை வரும் மே 28ம் தேதிக்கு அமர்வு தள்ளி வைத்தது.

