ADDED : டிச 28, 2024 03:19 AM
போலீஸ் கமிஷனர் கூறியதற்கும், தான் கூறியதற்கும் முரண்பாடு உள்ளதாக எழுந்த சர்ச்சைக்கு, அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக, நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது, அவர் கூறியதற்கும், நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் கூறியதற்கும் இடையே முரண்பாடு இருப்பதாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், 'சென்னை போலீஸ் கமிஷனர், பல்கலை குழு வழியாக காவல் துறைக்கு புகார் வந்ததாகக் கூறியுள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர், முதலில் காவல் துறையிடம் மாணவி புகார் அளித்த பின்னரே, பல்கலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறியுள்ளார். ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் யாரை காப்பாற்ற, தி.மு.க., அரசு முயற்சிக்கிறது?' என, கேள்வி எழுப்பி இருந்தார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள விளக்கம்:
அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த குற்றம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவி, காவல்துறை அவசர உதவி எண், '100'க்கு நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், விசாரணை நடத்த வந்த காவல் துறையினரிடம், அண்ணா பல்கலையின், 'போஷ்' எனப்படும், உள்விசாரணை குழுவை சேர்ந்த ஒரு பேராசிரியர் உதவியோடு, பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார்.
காவல் துறையினர் பல்கலைக்கு வந்து விசாரணை செய்யும்போது தான், இந்த சம்பவம் தொடர்பாக போஷ் குழுவில் இருந்த மற்றவர்களுக்கு, இந்த பிரச்னை தெரியவந்துள்ளது. அதை வைத்து தான் போஷ் குழு நேரடியாக புகார் அளிக்கவில்லை என தெரிவித்திருந்தேன். அது தவறான பொருள்படும்படி அமைந்து விட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

