ADDED : டிச 05, 2024 03:39 AM
சென்னை: டில்லி சென்றுள்ள, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, உட்கட்சி தேர்தல் தொடர்பாக, மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
அரசியல் தொடர்பான கல்வி பயில, மூன்று மாதங்கள் பிரிட்டன் சென்ற, அண்ணாமலை, கடந்த 1ம் தேதி சென்னை திரும்பினார். அடுத்த நாள், உட்கட்சி தேர்தல் தொடர்பாக, மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். நேற்று முன்தினம் இரவு திடீரென டில்லி சென்றார்.
அவர், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது, தமிழகத்தில் விரைவில் நடக்க உள்ள, மாவட்டத் தலைவர்கள் தேர்தல் தொடர்பாக ஆலோசித்தாக, தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
இன்னும் சில தினங்களில், தமிழக பா.ஜ., மாவட்ட, மாநில பொறுப்புகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது. பலரும் அந்த பதவிகளைப் பெற, டில்லியில் உள்ள மூத்த தலைவர்களை சந்தித்து, வலியுறுத்தி வருகின்றனர்.
டில்லி சென்ற அண்ணாமலை, 'சிபாரிசு அடிப்படையில் பொறுப்பாளர்களை நியமிக்க கூடாது; கட்சி பணியில் தீவிரமாக களப்பணியாற்றுவோரை நியமிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, மேலிடத் தலைவர்களிடம் கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடை வழங்குமாறு கூறி உள்ளார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.