அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு மண்டல பொறுப்பு அளித்தது ஏன்?
அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு மண்டல பொறுப்பு அளித்தது ஏன்?
ADDED : மே 21, 2025 04:52 AM

கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்கள் அடங்கிய மண்டல தேர்தல் பொறுப்பாளராக, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளையும், 8 மண்டலமாக, தி.மு.க., பிரித்துள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு அமைச்சரை பொறுப்பாளராக நியமித்துள்ளது. அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆ.ராஜா, கனிமொழி ஆகிய ஏழு பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போது, கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்கள் அடங்கிய, 8வது மண்டல பொறுப்பாளராக, அமைச்சர் பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: முதற்கட்டமாக நியமிக்கப்பட்ட, 7 மண்டல தேர்தல் பொறுப்பாளர்களில், வன்னியர் ஒருவர் கூட இல்லை என்ற அதிருப்தி வன்னியர் மத்தியில் ஏற்பட்டது. இதையடுத்து, வன்னியரை தி.மு.க., புறக்கணிக்கிறது என, பா.ம.க.,வினரும் விமர்சித்து வந்தனர். அதையடுத்து, வன்னியர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில், அமைச்சர் பன்னீர்செல்வம், கட்சியின் மண்டல தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில், 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவ்வாறு கூறினர்.
- நமது நிருபர் -