விக்கிரவாண்டி தி.மு.க.,-எம்.எல்.ஏ.,புகழேந்தி ...வெயிலுக்கு பலி: ஸ்டாலின் கூட்டத்தில் மயக்கம் பின் மரணம்
விக்கிரவாண்டி தி.மு.க.,-எம்.எல்.ஏ.,புகழேந்தி ...வெயிலுக்கு பலி: ஸ்டாலின் கூட்டத்தில் மயக்கம் பின் மரணம்
ADDED : ஏப் 06, 2024 11:05 PM
விழுப்புரம்:மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., புகழேந்தி, கட்சிக்காக வெயிலையும் பொருட்படுத்தாமல், தேர்தல் பிரசார பொதுக்கூட்ட பணியில் ஈடுபட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் மயங்கி விழுந்தார். அவசர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று காலை அவர் மரணமடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி, 71. இவருக்கு மார்ச் மாதம் கல்லீரல் பாதிப்பும், மஞ்சள் காமாலை நோய் பாதிப்பும் ஏற்பட்டன. அதனால், சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைக்கு பின், உடல் நலம் சீரானது. நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். வீட்டில் ஓய்வெடுக்காமல், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், முதல்வர் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்ட ஏற்பாடுகளை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, விழுப்புரம் அடுத்த வி.சாலையில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. முதல்வர் வருவதற்கு முன், மாலை 6:30 மணியளவில் மேடையில் காத்திருப்போர் அறையில், எம்.எல்.ஏ., புகழேந்தி கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்திருந்தார்.
அப்போது, திடீரென அவர் ரத்த வாந்தி எடுத்து மயங்கினார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் இருந்தவருக்கு, நேற்று அதிகாலை நெஞ்சு வலி ஏற்பட்டது. டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி, நேற்று காலை 10:35 மணிக்கு அவர் இறந்தார்.
அவரது உடல் காலை 11:30 மணிக்கு, விழுப்புரம் அறிவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, மகன் கவுதமசிகாமணி, அமைச்சர்கள் எ.வ.வேலு, சுப்பிரமணியன், பன்னீர்செல்வம், கணேசன், வி.சி., கட்சி எம்.பி., ரவிக்குமார், துணை சபாநாயகர் பிச்சாண்டி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். புகழேந்தி மனைவி கிருஷ்ணம்மாள், மகன் செல்வகுமார், மகள்கள் செல்வி, சுமதி, சாந்தி ஆகியோருக்கு ஆறுதலும் கூறினர்.
புகழேந்தியின் உடல் அவரது சொந்த ஊரான விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதிக்கு இன்று எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும். பின், மாலை 4:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

