கணவர் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த மனைவி உயிரிழப்பு
கணவர் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த மனைவி உயிரிழப்பு
ADDED : ஜூலை 18, 2025 05:11 AM

விக்கிரவாண்டியில் தொடரும் சோகம்
விக்கிரவாண்டி: குடும்ப பிரச்னையில், ஏர்கன் துப்பாக்கியால் கணவர் சுட்டதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த புது மனைவி நேற்று உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த வாக்கூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் தென்னரசன், 28: இவருக்கும் திண்டிவனம் அடுத்த தெளி கிராமத்தை சேர்ந்த லாவண்யா ,26: என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு திருமணம் நடந்தது.
தென்னரசன் தினமும் குடித்து விட்டுவந்ததால், கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து லாவண்யா, அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். அதையடுத்து, கடந்த 11 ம் தேதி அன்று வாக்கூர் வந்த லாவண்யாவின் பெற்றோர், இருவரையும் சமாதானம் செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த தென்னரசன், கடந்த 12ம் தேதி காலையில் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது, வீட்டில் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியால் மனைவி லாவண்யாவை சுட்டார்.
இந்த சத்தம் கேட்டு வந்த தென்னரசுவின் தாய் பச்சையம்மாள் ,53: மற்றும் சண்டையை தடுக்க வந்த அவரது சித்தப்பா மகன் வழக்கறிஞர் கார்த்திக் 28; ஆகியோரையும் துப்பாக்கியால் சுட்டார்.
பலத்த காயமடைந்த மூன்று பேரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து லாவண்யா,கார்த்திக் இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அன்றைய தினமே, கார்த்திக் இறந்தார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த தென்னரசுவின் மனைவி லாவண்யா நேற்று உயிரிழந்தார்.