ADDED : மார் 24, 2024 11:18 PM

புவனகிரி : கடலுார் மாவட்டம், ஆலம்பாடியை சேர்ந்தவர் மாமலைவாசன், 27; ஜே.சி.பி., டிரைவர். இவர், ஓராண்டிற்கு முன் திட்டக்குடி அருகே தாழைநல்லுாரை சேர்ந்த அபிநயா, 18, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமானது முதல், போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த ஆண்டு ஆக., 18ம் தேதி இரவு, ரத்த வாந்தி எடுத்த நிலையில் வீட்டில் அபிநயா மயங்கி கிடந்தார். மறுநாள் காலையில் பார்த்த அக்கம் பக்கத்தினர், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
மருத்துவக் குழுவினர் சோதித்ததில் அவர் இறந்தது தெரிந்தது. அபிநயா தந்தை ராஜவேல், மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக மருதுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்தனர். பிரேத பரிசோதனையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.
போலீசார் சந்தேக மரணம் வழக்கை, கொலை வழக்காக மாற்றி, தலைமறைவாக இருந்த மாமலைவாசனை தேடினர். ஏழு மாதங்களுக்கு பின் நேற்று, சொந்த ஊருக்கு வந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

