நீலகிரி, விருதுநகர், மேகமலையில் வன உயிரின தகவல் மையங்கள்
நீலகிரி, விருதுநகர், மேகமலையில் வன உயிரின தகவல் மையங்கள்
ADDED : ஜூன் 03, 2025 10:15 PM
சென்னை:நீலகிரி, விருதுநகர் உள்ளிட்ட ஆறு இடங்களில், வன உயிரினங்கள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தகவல் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில், டாப்ஸ்லிப் செல்லும் வழியில், வன உயிரினங்கள் குறித்து, மக்கள் எளிதாக புரிந்துகொள்ள சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பல்வேறு வகை விலங்குகளின் தோற்றம், பரவல், வாழ்க்கைச்சூழல், அச்சுறுத்தல் போன்றவை, ஒலி, ஒளி காட்சியாக அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, நவீன தொழில்நுட்பம் அடிப்படையில் செயல்படும் இந்த மையம், விலங்குகள் குறித்து அறிவதில் புதிய அனுபவத்தை அளிப்பதாக உள்ளது. மக்களின் வரவேற்பு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வன உயிரினங்கள் குறித்து மக்கள் அறிய, இந்த சிறப்பு மையம் நல்ல வழிமுறையாக அமைந்துள்ளது. எனவே, நீலகிரி, விருதுநகர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தேனி மாவட்டம் மேகமலை ஆகிய இடங்களில், வன உயிரினங்கள் குறித்த தகவல் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவற்றில், 'லேசர்' காட்சி, 4டி, 7டி போன்ற புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக, வன விலங்குகள் குறித்த விபரங்களை, மக்களுக்கு தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, தகவல் மையத்திற்கான இடம், வடிவமைப்பை தேர்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள், இந்த மையங்களை ஏற்படுத்தும் நோக்கில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.