ADDED : ஜன 05, 2025 01:58 AM
கோவை:தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி பதவி இன்றுடன்முடிகிறது. மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தும்முன், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, உள்ளாட்சிகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. இதன்படி, 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. புதிதாக, 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இவற்றின் வார்டுகளை இறுதி செய்து, மறுவரையறை செய்ய வேண்டும். இதற்கான பணிகளை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் துவக்கி விட்டன. அந்தந்த உள்ளாட்சிகளில் உள்ள தகவல்களை சேகரித்து, நிர்வாக ரீதியான வேலைகளை செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், இட ஒதுக்கீடு எவ்வாறு வழங்குவது என்ற சிக்கல் உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர் கூறியதாவது:
மக்கள் தொகை, வரி விதிப்புகள் அடிப்படையில் வார்டுகள் மறுவரையறை செய்யப்படும். வார்டு ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு மிக முக்கியம். ஒரு உள்ளாட்சி அமைப்பில், 100 வார்டுகள் இருந்தால், 10 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில், 10 வார்டுகள் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கப்படும்; அதில், 5 வார்டுகள் பெண்களுக்கு வழங்கப்படும். மீதமுள்ள, 90 வார்டுகளில், 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்; மற்ற வார்டுகளில் 'பொது' என்ற வகைப்பாட்டில் இருக்கும்.
இதுவரை, 2011 மக்கள்தொகை அடிப்படையில் அரசு துறைகளில் பணிகள்மேற்கொள்ளப்படுகின்றன. 13 ஆண்டுகளாகி விட்டன;மக்கள் தொகை பெருகி விட்டது. நகரங்கள் வளர்ச்சி அடைந்துஉள்ளன.
வாக்காளர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துஉள்ளது. 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். லோக்சபா தேர்தலுக்கு பின், கணக்கெடுப்பு நடத்தப்படும் என கூறப்பட்டும், இன்னும் ஆரம்பிக்கவில்லை.
மக்கள் தொகை கணக்கெடுக்காவிட்டால், உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு எண்ணிக்கையில் தவறு ஏற்படும். 2011 மக்கள் தொகையை வைத்து, இப்போது வார்டு எண்ணிக்கையை இறுதி செய்வது சாத்தியப்படாது.
இட ஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளை ஒதுக்குவதற்காக, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மாநில அளவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருப்பதால், அதற்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்க வேண்டும் என்றனர்.