நெசவாளர்களுக்கு தனி மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிக்கப்படுமா?
நெசவாளர்களுக்கு தனி மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிக்கப்படுமா?
ADDED : மார் 25, 2025 01:22 AM

ஸ்ரீவில்லிப்புத்துார்: தமிழகத்தில் நெசவாளர்களுக்கான தனி மருத்துவ காப்பீடு திட்டத்தை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேனி, விருதுநகர், திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில் தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள், பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள், போர்வைகள் உட்பட பல்வேறு கைத்தறி ஆடைகளை நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெய்து வருகின்றனர்.
இவர்களின் நலனிற்காக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் 2007ல் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் குடும்பத்தில் ஒருவர் நெசவாளராக கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் வரை மருத்துவ செலவை அரசு ஏற்று வந்தது.
இதன் மூலம் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் அதற்குரிய ரசீது சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் கொடுத்து காப்பீட்டு திட்டத்தில் இருந்து செலவு தொகையை நேரடியாக பெற முடிந்தது. ஆனால் 2017ல் மத்திய அரசு இத்திட்டத்தை நிறுத்தியதால் மாநில அரசு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் நெசவாளர்களை இணைத்து அடையாள அட்டைகளை வழங்கியது.
ஆனால் தற்போது வரை நெசவாளர்களுக்கு தனி மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையே தொடர்கிறது. இதுகுறித்த அறிவிப்பை தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.