கோடை சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்படுமா? எதிர்பார்ப்பில் தென்மாவட்ட பயணிகள்
கோடை சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்படுமா? எதிர்பார்ப்பில் தென்மாவட்ட பயணிகள்
ADDED : ஏப் 21, 2025 03:09 AM

விருதுநகர் : மதுரை ரயில்வே கோட்டத்தில் போதிய கட்டமைப்பு வசதிகள் இருந்தும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படவில்லை. முக்கிய ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் தொடருவதால் கோடை விடுமுறையையொட்டி சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தென் மாவட்ட பயணிகளிடம் உள்ளது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் கல்வி, வேலை காரணமாக அதிகளவில் வசிக்கின்றனர். கோடை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் திரும்ப அவர்களுக்கு போதிய ரயில்கள் கிடைப்பதில்லை.
கட்டமைப்பு வசதிகள்
மதுரை -- கன்னியாகுமரி மின் ரயில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்தன. மதுரை -- கொல்லம், மதுரை -- போடி வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு மின் இன்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதனால் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கமான ரயில்களே இயக்கப்படுவதால் முக்கிய ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் நீள்கிறது.
திருநெல்வேலி வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் அனந்தபுரி, குருவாயூர், நெல்லை, திருச்செந்துார், முத்துநகர், குமரி விரைவு ரயில்கள், தாம்பரம்-- செங்கோட்டை, நிஜாமுதீன் -- குமரி சிறப்பு ரயில்கள், நெல்லை, நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில் ஜூன் முதல் வாரம் வரை காத்திருப்போர் பட்டியல் உள்ளது.
செங்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் பொதிகை, கொல்லம் ரயில்களிலும் அதே நிலை உள்ளது. பெங்களூரு வழித்தடத்தில் இயங்கும் பெங்களூரு -- நாகர்கோவில், மைசூரு -- துாத்துக்குடி, தாதர் -- திருநேல்வேலி ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் நீண்டபடி உள்ளது. இதனால் பஸ்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலை உள்ளது.
கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா
தீபாவளி, பொங்கலை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு 'மெமு' ரயில்கள் இயக்கப்பட்டு வரவேற்பை பெற்றது. திருச்சியில் பராமரிப்பு பணிமனை உள்ளதால் கோடை விடுமுறையை முன்னிட்டும் தாம்பரம் -- திருச்சி, திருச்சி -- திருநெல்வேலி இடையே மெமு ரயில்களை இயக்க வேண்டும். வழக்கமான ரயில்களில் ஏசி பெட்டிகளை கூடுதலாக இணைத்தும், சென்னை, பெங்களூருவில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஏசி சிறப்பு ரயில்களையும் இயக்க வேண்டும்.
முற்றிலும் முன்பதிவில்லா 'அந்தியோதயா ரயில்' தாம்பரம் -- நாகர்கோவில் இடையே மட்டும் இயக்கப்படுகின்றன. கூடுதலாக தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக செங்கோட்டை, துாத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கும் இயக்க வேண்டும்.