ADDED : ஜன 07, 2025 10:11 PM
ஈரோடு:''ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், கட்சித் தலைமை அறிவித்தால் போட்டியிடுவோம்,'' என, அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலர் ராமலிங்கம் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில், 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி கட்சியாக இருந்த த.மா.கா., போட்டியிட்டது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜா, 8,523 ஓட்டில் தோல்வியை தழுவினார். அடுத்து, 2023 இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வே நேரடியாக களமிறங்கியது. முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு போட்டியிட்டு, 66,233 ஓட்டில் தோல்வியடைந்தார்.
இத்தேர்தலில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தி.மு.க.,வின் வலுவான பிரசாரத்துக்கு பதிலடி கொடுத்தனர். ஆனாலும், கட்சி தோல்வி அடைந்தது.
ஆனால், சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடாமல் ஒதுங்கியது. இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேநேரம் முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, பகுதி செயலர் மனோகரன், முன்னாள் மேயர் மல்லிகா போன்றோர் போட்டியிட விரும்புகின்றனர். ஆனால், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் மட்டுமே போட்டியிடுவோம் என கூறியிருப்பதாக தெரிகிறது.
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலர் ராமலிங்கம் கூறுகையில், ''கட்சி தலைமை போட்டியிட முடிவெடுத்தால், வலுவான வேட்பாளர் நிறுத்தி போட்டியிடுவோம்,'' என்றார்.

