UPDATED : ஜூன் 02, 2025 04:33 AM
ADDED : ஜூன் 02, 2025 01:07 AM

திண்டிவனம்: “பா.ம.க.,வில் எந்த குழப்பமும் இல்லை. எல்லா பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு கிடைக்கும்,” என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாசிற்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வலுத்த நிலையில், கடந்த 30 முதல், சென்னை சோழிங்கநல்லுாரில், மாவட்ட நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கினார். அவர்கள், அதே பொறுப்பில் தொடருவர் என அன்புமணி போட்டியாக அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், கட்சி நிர்வாகிகள் சிலருடன் ஆலோசனை நடத்திய பின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று பேட்டி அளித்தார்.
அவரிடம், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்குத்தான் முழு அதிகாரம் இருப்பதாக அன்புமணி கூறியது பற்றி கேட்டபோது, “பா.ம.க., சட்ட விதிகள் பற்றி பிறகு சொல்கிறேன். ஒவ்வொரு கட்சியிலும் இதுபோன்று நடப்பது சகஜம் தான். இதை நீங்கள் பெரிதுபடுத்த தேவை இல்லை. சுதந்திரமாக செயல்படுவது அவரது உரிமை. கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவது பற்றி இன்னும் யோசிக்கவில்லை. தொண்டர்களுக்கிடையே எந்த குழப்பமும் இல்லை. எல்லா பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு கிடைக்கும்,” என அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டுவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி பதிலளித்தார்.
ராமதாஸ் தொடர்ந்து கூறுகையில், “பூம்புகாரில் ஆகஸ்ட் 10ல் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெறும். இது முழுக்க முழுக்க பெண்கள் கலந்து கொள்ளும் மாநாடு. இந்த மாநாட்டு குழு தலைவராக வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி இருப்பார். மாநாட்டில் கலந்து கொள்ள எல்லோருக்கும் அழைப்பு விடப்படும். என்னை யாரும் பின்னால் இருந்து இயக்கவில்லை. கும்மிடிப்பூண்டியிலிருந்து குமரி வரை, 95,000 கிராமங்களுக்கு 46 ஆண்டாக பயணம் செய்து கட்சியை வளர்த்திருக்கிறேன்,” என்றார்.
கட்சி பொருளாளர் திலகபாமாவை நீக்கியது போல், அன்புமணியை நீக்குவீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்க ராமதாஸ் மறுத்துவிட்டார். அ.தி.மு.க., அறிவித்துள்ள ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலில் பா.ம.க., இடம் பெறாதது குறித்து கேட்டதற்கு, “பதவி வரும் போகும், வரும் போது வரும்,” என்று ராமதாஸ் கூறினார்.