ADDED : டிச 24, 2024 09:43 PM
சென்னை:முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் 101வது பிறந்த நாள், இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது நுாற்றாண்டை கொண்டாட, பா.ஜ., மேலிடம் ஆர்வம் காட்டாதது, அக்கட்சி தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் பிரதமரும், பா.ஜ.,வின் அடையாளமாக இருந்தவருமான வாஜ்பாய், 1924 டிச., 25ல் பிறந்தார்; 2018 ஆக., 16ம் தேதி, தன் 93வது வயதில் காலமானார். இன்று, அவரது 101வது பிறந்த நாள்.
கடந்த 2014ல் மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின், வாஜ்பாய் பிறந்த நாள் 'நல்லாட்சி தினமாக' அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. கடந்த 1980க்கு முன்பு, ஜனசங்கமாக இருந்த பா.ஜ., 1952 முதல் தேர்தலில் இருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறது.
எனினும், பார்லிமென்டில் வாஜ்பாயின் பேச்சு தான், அவரை மட்டுமல்லாது, பா.ஜ.,வையும் மக்களுக்கு தெரிய வைத்தது. 1975ல் எமர்ஜென்சியை எதிர்த்து நடந்த போராட்டம், 1977ல் காங்கிரசுக்கு எதிராக ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது ஆகியவற்றில், வாஜ்பாயியின் பங்களிப்பு மிகப்பெரியது.
ஜனதா ஆட்சியில், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த வாஜ்பாயின் செயல்பாடுகள் இன்றளவும் பேசப்படுகின்றன. கடந்த 1998 முதல் 2004 வரை ஆறு ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அவரது ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட, தங்க நாற்கர சாலை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள், இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்டன. பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி, உலகின் பார்வையை இந்தியாவை நோக்கி திருப்பினார்.
'ஹிந்து மதவாத கட்சி' என பா.ஜ.,வை விமர்சிப்பவர்கள் கூட, வாஜ்பாயை ஏற்றுக்கொண்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, வாஜ்பாயை, 'சேற்றில் மலர்ந்த செந்தாமரை' எனப் பாராட்டினார். வாஜ்பாய் நுாற்றாண்டை, 2023 டிச., 25ல் இருந்து, பா.ஜ., கொண்டாடி இருக்க வேண்டும்.
ஆனால், லோக்சபா தேர்தல் பணிகளில் தீவிரமாக இருந்ததால், பிறந்த நாளில் மரியாதை செலுத்தியதோடு முடித்துக் கொண்டனர். இது பா.ஜ., தொண்டர்களை வேதனை அடையச் செய்துள்ளது.
வாஜ்பாய் பிறந்து, இன்று 100 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், ஓராண்டுக்கு மத்திய அரசு சார்பிலும், பா.ஜ., சார்பில் நாடெங்கும், அவரது நுாற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாட வேண்டும் என, பா.ஜ., தொண்டர்கள் கட்சி தலைமையிடம் வலியுறுத்தி உள்ளனர்.
வாஜ்பாய் நுாற்றாண்டு விழா நிறைவு கொண்டாட்டங்கள் குறித்த அறிவிப்பை, பா.ஜ., தலைமையும், மத்திய அரசும் விரைவில் வெளியிட வேண்டும் என, கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

