இது உங்கள் இடம்: காங்கிரசுக்கு ஆறுதல் பரிசு கிட்டுமா?
இது உங்கள் இடம்: காங்கிரசுக்கு ஆறுதல் பரிசு கிட்டுமா?
ADDED : ஜன 29, 2024 03:43 AM

என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
மத்தியில் ஆளும் பா.ஜ.,வை வீட்டுக்கு அனுப்ப வலுவான எதிர்க்கட்சி தேவை என, சில மாநில கட்சி தலைவர்கள் முயற்சித்து உருவாக்கியது தான், 'இண்டியா' கூட்டணி. இவர்களுக்கு பொதுவான கொள்கை, 'மோடி மீண்டும் பிரதமராக வந்துவிடக் கூடாது' என்பது மட்டும் தான். மற்றபடி மோடி ஆட்சியில் வேறு எந்த குற்றச்சாட்டையும் இவர்களால் சுமத்த முடியவில்லை.
அதே நேரம், இண்டியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளின் நற்சான்றிதழ் என்னவென்று பார்த்தால், ஆம் ஆத்மி, மேற்கு வங்கத்தின் திரிணமுல் காங்., தமிழகத்தின் தி.மு.க., என எல்லா கட்சிகளுமே ஊழலில் ஊறி திளைத்தவை தான். இந்த கட்சிகள், பல்வேறு ஊழல் வழக்குகளை எதிர்கொண்டு நீதிமன்றத்துக்கு நடையாய் நடக்கின்றன.
இதற்கு மத்தியில், இண்டியா கூட்டணி பா.ஜ.,வுக்கும், பிரதமர் மோடிக்கும் சிம்ம சொப்பனமாக திகழும் என்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து பல ஊடகங்களும் எழுதி தள்ளின. பொதுவாக கிராமங்களில் சொல்வர்... 'கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது' என்பர். அதுபோல, இண்டியா கூட்டணி மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை. தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே, கூட்டணிக்குள் முட்டல், மோதல்கள் உருவாகி விட்டன.
மேற்கு வங்கம், பஞ்சாபில் காங்., கட்சியுடன் கூட்டணி இல்லை என, திரிணமுல் காங்கிரசும், ஆம் ஆத்மியும் திட்டவட்டமாக அறிவித்து விட்டன. இது, அடுத்தடுத்து பல மாநிலங்களிலும் தொடரும் என்றே தெரிகிறது. தமிழகத்தில் மட்டும் தான், தி.மு.க., - காங்., கூட்டணி ஓரளவுக்கு தாக்குப்பிடித்து நிற்கிறது.
வடமாநிலங்களில் காங்., கட்சி புறக்கணிக்கப்படுவதை மனதில் வைத்து, இங்கும் அக்கட்சிக்கான தொகுதி ஒதுக்கீட்டை, தி.மு.க., குறைக்காமல் இருந்தாலே, காங்கிரஸ் கட்சிக்கு பெரிய ஆறுதல் பரிசாக அமையும்.