ADDED : மார் 20, 2024 01:33 AM

''வேளாண் கருவிகள் விலையை ஏத்தி விற்குறாங்க பா...'' என, ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''தமிழக வேளாண்மை துறை மூலமா விவசாயிகளுக்கு கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி, இரண்டு கதிர் அரிவாள்னு ஆறு உபகரணங்கள் அடங்கிய, 'வேளாண் கருவிகள் தொகுப்பு' வழங்குறாங்க பா...
''மொத்தம், 3,000 ரூபாய் மதிப்புள்ள இந்த தொகுப்பை, 50 சதவீத மானியத்துல, அதாவது, 1,500 ரூபாய்க்கு அரசு தருது... ரேஷன் கார்டு அடிப்படையில, ஒரு குடும்பத்துக்கு ஒரு தொகுப்பு தான் தரணும் பா...
''அதுலயும், சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், விதவைகள், திருநங்கையர், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு முன்னுரிமை தரணும்... சிட்டா, பி.எம்., கிஸான் எண், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் விண்ணப்பிக்கணும் பா...
''ஆனா, பெரம்பலுார் மாவட்டம் மற்றும் யூனியன்ல இருக்கிற வேளாண் துறையினர் இந்த விதிமுறைகள் எதையும் கண்டுக்கிறது இல்ல... வேளாண் கருவி தொகுப்பை, 2,500 ரூபாய் வரைக்கும் விற்கிறதோட, பயனாளிகளை சேர்க்கவும் கணிசமா லஞ்சம் வாங்குறாங்க பா...
''இன்னும் சிலர், கருவிகளை தங்களது சொந்த உபயோகத்துக்கு எடுத்துட்டும் போயிடுறாங்க... பி.எம்., உதவித்தொகை திட்டத்துல விவசாயிகளை சேர்க்கவும், 2,000 துவங்கி, 5,000 ரூபாய் வரைக்கும் வசூலிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''அதிகாரி இல்லாததால, அலுவலர்களும் சரியா வர்றது இல்லைங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சேலம் மாவட்டம், தாரமங்கலம் நகராட்சி கமிஷனரா சேம் கிங்ஸ்டன் என்ற அதிகாரி இருக்காரு... இவர், இடங்கணசாலை கமிஷனர் பொறுப்பையும் சேர்த்து பார்க்கிறதால, அடிக்கடி அங்க போயிடுறாருங்க...
''பெரும்பாலும், தாரமங்கலத்துல அவர் இல்லாததால, நகராட்சி அலுவலர்கள் சிலரை தவிர மற்ற யாரும் சரியான நேரத்துக்கு ஆபீஸ் வர்றதே இல்லைங்க... அப்படியே வந்தாலும், மொபைல் போனையே நோண்டிட்டு இருக்காங்க...
''அதுவும் இல்லாம, 'ஈகோ' பிரச்னையால அதிகாரிகளிடம் ஒற்று மையும் இல்ல... இதனால, சொத்து வரி பெயர் மாற்றம், புது குடிநீர் இணைப்புன்னு பொதுமக்கள் மனுக்கள் குடுத்து ஒரு வருஷம் ஆகியும், பெண்டிங்குல கிடக்குது...
கேப்டன் இல்லாத கப்பலா, தாரமங்கலம் நகராட்சி தத்தளிக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''கோஷ்டிப்பூசலை தீர்க்கலன்னா, கோவையை இந்த முறையும் கோட்டை விட்டுடுவோம்னு சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''தி.மு.க., தகவலா வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி
''ஆமாம்... கோவையில, 'மாஜி' அமைச்சரின் தம்பி மருமகனான டாக்டருக்கு தான், தி.மு.க.,வுல சீட் தரப்போறதா தகவல்கள் பரவறது... ஆனா, 'மாஜி' தரப்புக்கும், டாக்டர் தரப்புக்கும் பேச்சுவார்த்தை கூட கிடையாது ஓய்...
''இதனால அவரை நிறுத்தினா, 'மாஜி' தரப்பே, 'பொங்கி' எழுந்து, அவரை தோற்கடிச்சுடும்னு தொண்டர்கள் புலம்பறா... இதுக்கு நடுவுல, மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரான, 'சின்னவர்' ஒரு முறை மட்டும் எட்டி பார்த்துட்டு போனவர் தான், அப்பறமா வரவே இல்ல ஓய்...
''கட்சிக்குள்ள ஏகப்பட்ட கோஷ்டிகள் இருக்கறதால, 'தேர்தலுக்கு முன்னாடி அவாளை எல்லாம் ஒருங்கிணைக்கணும்... இல்லாம போனா, சட்டசபை தேர்தல் மாதிரி, லோக்சபா தேர்தல்லயும் கோவை கைநழுவிடும்'னு உடன்பிறப்புகள் எச்சரிக்கை பண்றா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, அனைவரும் கலைந்தனர்.

