ADDED : ஜன 02, 2025 11:11 PM
சென்னை:அறுவடைக்குப் பின் வேளாண் விளை பொருட்களை பாதுகாக்க, தமிழகம் முழுதும் உள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள், கிடங்குகள் உள்ளிட்டவை எங்கு உள்ளன என்பதை அறிய, 'டி.என்.எபெக்ஸ்' நிறுவனம், மொபைல் செயலியை உருவாக்கி உள்ளது.
இது, விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் ஏற்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் அறுவடைக்குப் பின், உரிய விலை கிடைக்கும் வரை, விளை பொருட்களை பாதுகாக்க சிரமப்படுகின்றனர்.
அவர்கள் பயன் பெற, மாநிலம் முழுதும் அறுவடைக்குப் பின் பயன்படுத்தக்கூடிய கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள், முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள், உணவு பரிசோதனை ஆய்வகங்கள் போன்றவை எங்கெங்கு உள்ளன என்ற விபரங்களை அறிந்துகொள்ள உதவும் மொபைல் செயலியை, தமிழக அரசின் டி.என்.எபெக்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
இந்த செயலியில், விவசாயிகள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, அருகில் உள்ள கிடங்குகள், கொள்ளளவு, காலியிடம் விபரங்களை அறிய முடியும்.
உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும், உணவு பரிசோதனை ஆய்வகங்கள் எங்கெங்கு உள்ளன, என்னென்ன ஆய்வு மேற்கொள்ள முடியும் உள்ளிட்ட விபரங்களை அறிய முடியும். சேவைகளை பெற, மொபைல் செயலி வாயிலாக பதிவும் செய்யலாம்.
இந்தச் செயலி உருவாக்கப்பட்டு, சோதனைகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது.
எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன், அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, விவசாயிகள் மற்றும் உணவு தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.