பஞ்சு வரத்து சரிந்து வருவதால் இறக்குமதி வரி ரத்து ஆகுமா? ஜவுளித்துறை கமிஷனர் இன்று ஆலோசனை
பஞ்சு வரத்து சரிந்து வருவதால் இறக்குமதி வரி ரத்து ஆகுமா? ஜவுளித்துறை கமிஷனர் இன்று ஆலோசனை
ADDED : ஏப் 15, 2025 11:43 PM

திருப்பூர்:பஞ்சு வரத்து சரிந்துள்ள நிலையில், இறக்குமதியை அதிகரிக்கும் நோக்கில் அதன் மீதான வரியை ரத்து செய்வது தொடர்பாக, தொழில் துறையினருடன் ஜவுளித்துறை கமிஷனர் இன்று கலந்தாய்வு நடத்துகிறார்.
நம் நாட்டில், வழக்கமான பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டிருந்தாலும், மகசூல் வெகுவாக குறைந்துள்ளது. வரும் ஐந்து மாதங்களுக்கான தேவைகளை சமாளிக்க, இறக்குமதியை சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நடப்பு பருத்தியாண்டில், 26 லட்சம் பேல் அளவுக்கு இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சவரம்பை தளர்த்துவதுடன், பஞ்சு இறக்குமதிக்கான வரி 11 சதவீதத்தை முழுமையாக நீக்க வேண்டும் என, நுாற்பாலைகள் எதிர்பார்க்கின்றன.
இதுகுறித்து, டாஸ்மா எனும் தமிழக ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:
பஞ்சு வரத்து குறைந்ததால், மேலும் ஐந்து மாதங்களுக்கு சமாளிக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவின் தரமான பருத்தி பஞ்சு விலை குறைவாக இருப்பதால், இறக்குமதி செய்து சமாளிக்கலாம்.
மத்திய அரசு, பஞ்சு இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம்.
இந்த சூழலில், மத்திய ஜவுளித்துறை கமிஷனர், மும்பை அலுவலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இதில், பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்யும் அறிவிப்பு வெளியாகும் என, நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

