வெளிநாடு செல்லும் அரசு டாக்டர்களுக்கு அனுமதி தடையில்லா சான்றிதழ் எளிதாகுமா
வெளிநாடு செல்லும் அரசு டாக்டர்களுக்கு அனுமதி தடையில்லா சான்றிதழ் எளிதாகுமா
ADDED : ஜூன் 01, 2025 04:11 AM
மதுரை: மருத்துவ மாநாடு, கருத்தரங்குகளில் பங்கேற்க வெளிநாடு செல்லும் அரசு டாக்டர்களுக்கான தடையில்லா சான்றிதழை (என்.ஓ.சி.,) அந்தந்த மாவட்ட அதிகாரி மூலம் வழங்க அரசு உத்தரவிட வேண்டுமென அரசு டாக்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மருத்துவ கருத்தரங்குகளில் பங்கேற்பதற்கு வெளிநாடு செல்லும் அரசு டாக்டர்களுக்கு தமிழக அரசு தடையில்லா சான்று அனுமதி வழங்க வேண்டும்.
அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியாற்றுபவர்கள் முதல் டீன் வரை வெளிநாடு செல்ல வேண்டும் எனில் சுகாதாரத்துறை, மருத்துவ கல்வி இயக்குநரகம் மூலம் அனுமதி பெற வேண்டும். இது காலதாமதத்தை ஏற்படுத்துவதால் மாவட்ட அதிகாரிகள் அளவில் என்.ஓ.சி., வழங்க உத்தரவிட வேண்டும் என்கின்றனர் அரசு டாக்டர்கள்.
அவர்கள் கூறியதாவது:
ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வெளிநாடு செல்ல என்.ஓ.சி., பெறுவதற்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தர விட்டுள்ளார். இதே போல டாக்டர்கள், என்.ஓ.சி., பெறுவதற்கு மாவட்ட அளவில் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பேராசிரியர்கள், ஆர்.எம்.,ஓ., மருத்துவ கண்காணிப்பாளர்களுக்கு டீன் மூலம் அனுமதி வழங்க வேண்டும்.
மருத்துவ சேவைக்கான மருத்துவமனைகளுக்கு இணை இயக்குநர் மூலமும் பொதுசுகாதாரப்பிரிவு டாக்டர்களுக்கு மாவட்ட துணை இயக்குநர் மூலம் அனுமதி வழங்கும் நடைமுறையை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்றனர்.