தி.மு.க.,வின் வயிற்றில் புளியை கரைக்கும் மோடியின் கூட்டங்கள் தொடர் பயணம் பா.ஜ.,வுக்கு திருப்புமுனை தருமா
தி.மு.க.,வின் வயிற்றில் புளியை கரைக்கும் மோடியின் கூட்டங்கள் தொடர் பயணம் பா.ஜ.,வுக்கு திருப்புமுனை தருமா
ADDED : மார் 17, 2024 11:23 AM

மதுரை: கடந்த 2019 லோக்சபா தேர்தலை காட்டிலும் இத்தேர்தலில் அண்ணாமலை வருகைக்கு பிறகு பா.ஜ., தமிழகத்தில் ஆழமாக காலுான்றி விட்டது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., கூட சொல்ல தயங்கும் விஷயங்களை 'பொளேர்' என அடிப்பது போல் அண்ணாமலை சொல்லி வருவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தவிர அவருக்கு இளைஞர்களின் ஆதரவும் பெருகி வருகிறது.
இச்சூழலில் பிரதமர் மோடியின் தொடர் வருகையால் தமிழக மக்களிடம் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசும் இடங்களில் எல்லாம் கட்சிக்காரர்களை தாண்டி, மத்திய அரசு திட்டங்களால் பயன்பெற்றவர்களும் பங்கேற்று வருகின்றனர். தவிர மோடியின் வளர்ச்சி திட்டங்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதை திருப்பூர் மாவட்டம் பல்லடம், கன்னியாகுமரி பொதுக் கூட்டங்களில் பார்க்க முடிந்தது.
'மோடி... மோடி...'
கன்னியாகுமரியில் பிரதமர் தி.மு.க., - காங்., கூட்டணியை 'கிழி கிழி' வென கிழித்தபோது, 'மோடி... மோடி...' என உற்சாக குரல் இளைஞர்கள் மத்தியில் ஒலித்தது. அண்ணாமலை பெயரை மோடி சொன்னதும் பொதுக்கூட்டமே ஆர்ப்பரித்தது. அதை பிரதமர் ரசித்தார்.
அதேபோல் சென்னை பொதுக்கூட்டத்திலும் ஆவேசமாக பேசிய மோடி, 'நீங்கள்(தி.மு.க.,) எந்த பணத்தை கொள்ளை அடிக்கிறீர்களோ, கொள்ளை அடித்தீர்களோ அது வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்காக செலவழிக்கப்படும்.
தமிழக வளர்ச்சிக்காக அளிக்கப்படும் பணத்தை யாரும் கொள்ளையடிக்க விடமாட்டேன்'' என தி.மு.க.,வை எச்சரித்தார். போதைப்பொருள் விவகாரத்தில் தி.மு.க., அரசு செயல்படும் விதம் குறித்தும் அவர் பேச தயங்கவில்லை.
'நான் தமிழகம் வரும்போது சிலருக்கு வயிற்றுவலி ஏற்படுகிறது. வயிற்றிலே புளியை கரைக்கிறது' என தி.மு.க.,வினரை குறிப்பிட்டார். பல்லடம் கூட்டத்தில் பேசிய பிரதமர், '2024ல் தமிழகத்தில் பா.ஜ.,வை மட்டும்தான் அதிகமாக பேசுகிறார்கள். புதிய சரித்திரத்தை படைக்கும். அதற்கான சான்றுதான் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை. தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பதை பார்க்க முடிகிறது' என்றார்.
பெண்களின் ஓட்டு முக்கியம்
தி.மு.க., அ.தி.மு.க.,வின் ஓட்டு பலமே பெண்கள்தான். அதனால் இரு கட்சிகளும் பெண்களுக்கு சலுகைகளை வாரி வழங்குகின்றன. மத்திய பா.ஜ., அரசும் பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி இருந்தாலும், தமிழக அளவில் பெண்களை ஈர்க்க புதிய யுக்தியை கையாண்டு வருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது பெண்களுக்கு தனிப்பாசம் இருப்பதை அறிந்த பிரதமர், தான் பேசும் பொதுக்கூட்டங்களில் அவர்களை பாராட்ட அவர் தவறவில்லை.
கன்னியாகுமரி கூட்டத்தில் 'என் அரசு பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக முழு சக்தியுடன் செயல்பட்டு வருகிறது. தி.மு.க., - காங்கிரசுக்கு பெண்களை ஏமாற்றவும், அவமானப்படுத்தவும் மட்டுமே தெரியும். அன்றைக்கு தி.மு.க., தலைவர்கள் ஜெயலலிதாவை எப்படி அவமானப்படுத்தினர் என்பது மக்களுக்கு தெரியும். அவர்கள் மாறவே இல்லை' என பேசியபோது பெண்கள் கைதட்டி ஆமோதித்தனர். இதன் மூலம் தி.மு.க., அ.தி.மு.க., பெண் தொண்டர்களையும் பா.ஜ., தங்கள் பார்க்க ஈர்க்க முயன்று வருவது தெரிகிறது.
ஸ்டாலினுக்கு பதிலடி
'தமிழகத்திற்கு மோடி என்ன திட்டங்களை கொண்டு வந்தார். அது குறித்து தமிழகம் வரும் அவரிடம் நீங்கள் கேட்பீங்களா' என மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டார். அதற்கு பதிலடியாக கன்னியாகுமரியில் பிரதமர் மோடி, 'தி.மு.க., காங்கிரஸ் தாங்கள் செய்த பாவ கணக்கிற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். அதுகுறித்து நீங்கள் கேட்பீர்களா...' என அழுத்தமாக மீண்டும் மீண்டும் மக்களை பார்த்து பிரதமர் கேட்க, மக்கள் 'கேட்போம்' என ஆர்ப்பரித்தனர்.
'தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் நிலையில் சேலம், கோவையை தொடர்ந்து பிரதமர் மீண்டும் அடுத்த மாதம் பிரசாரத்திற்கு வருகிறார். அவரின் தொடர் பயணம் நிச்சயம் தமிழக பா.ஜ.,வுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும். அது தேர்தல் முடிவில் தெரியும்' என உற்சாகமாக கூறுகின்றனர் பா.ஜ., நிர்வாகிகள்.

