தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பணம் பாயுமா... பதுங்குமா?

பணம் பாயுமா... பதுங்குமா?

பணம் பாயுமா... பதுங்குமா?


UPDATED : மார் 28, 2026 12:13 PM

ADDED : மார் 28, 2026 01:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2026 12:13 PM ADDED : மார் 28, 2026 01:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

தமிழக சட்டசபை தேர்தலில், தாங்கள் வெல்ல வேண்டும் என்பதைவிட, தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.,வின் தலைமை உறுதியாக உள்ளது. காரணம், மத்தியிலும் பிற மாநிலங்களிலும், பா.ஜ.,வுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் 'இண்டி' கூட்டணியில், காங்கிரசுக்கு அடுத்த முக்கியமான கட்சி தி.மு.க.,

அதை சாதிக்க, மூன்று விஷயங்களை செய்ய வேண்டும் என்று பா.ஜ., நிர்ணயித்தது. ஒன்று, பிரமாண்ட கூட்டணி அமைக்க வேண்டும். இரண்டு, முடிந்தால் தி.மு.க., கூட்டணியை உடைக்க வேண்டும். மூன்று, தி.மு.க.,வின் பண பலத்தை எதிர்கொள்ள வேண்டும். இவற்றை மனதில் வைத்து, 2025 ஜனவரியிலேயே தேர்தல் வேலைகளை பா.ஜ., துவங்கிவிட்டது.

அ.தி.மு.க.,வுடன் கடந்த ஏப்ரலில் கூட்டணியை அமைத்த பா.ஜ., தி.மு.க.,வை எதிர்கொள்ள சட்ட ரீதியான ஆதரவு மட்டுமல்லாமல், நிதி உதவியும் செய்கிறோம் என்று சொல்லியே கூட்டணியை அமைத்தது. இதற்கு உபகாரமாக, பிரமாண்ட கூட்டணி அமைப்பதற்கு முழு வீச்சில் அ.தி.மு.க., முயற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னது.

பழனிசாமி சொதப்பல்


இந்த தேர்தலில் 'எலக் ஷன் ஸ்பாயிலர்' ஆக தே.மு.தி.க., இருக்கும் என பா.ஜ., கணித்ததால், அவர்களை கூட்டணிக்கு அழைத்துவரும் 'அசைன்மென்ட்' அ.தி.மு.க.,விற்கு கொடுக்கப்பட்டது. அதற்கு, தே.மு.தி.க.,வின் மறைந்த தலைவர் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லுாரி விவகாரத்தை முடித்து வைக்க, பெரும் நிதி செலவு செய்ய வேண்டிருந்தது.

மற்ற கட்சிகளையும் இழுக்க நிதி தேவைப்படும் என அ.தி.மு.க., தெரிவிக்கவே, பெரும் முதலாளி ஒருவருடன் ஒரு சந்திப்பு ஏற்பாடானது. மாலத்தீவில் நடந்த அந்த சந்திப்பில், அ.தி.மு.க., முக்கிய புள்ளி ஒருவரின் மகன் கலந்துகொண்டதாக விஷயம் தெரிந்த அக்கட்சியினர் கூறுகின்றனர். அதன்பின், முதல் தவணையாக ஒரு பெரும் தொகை தமிழகம் வந்தடைந்தது.

நிதி தாராளமாக இருந்தும், ஏதோ தன் கையில் இருந்து நிதியை எடுத்துக் கொடுப்பது போல், தே.மு.தி.க., கோரிக்கைகளுக்கு தலையசைக்காமல் பழனிசாமி கறாராகவே இருந்தார். தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, பழனிசாமியின் அணுகுமுறையை விரும்பவில்லை. பழனிசாமி செலவு செய்ய தயங்குகிறார் என்ற தகவல், தி.மு.க.,வை சென்றடைந்தது. எல்லா விஷயங்களிலும் வேகமாக இருக்கும் தி.மு.க., உடனே தே.மு.தி.க.,வை அணுகியது. கூட்டணிக்கு அழைத்துவரும் பொறுப்பை அமைச்சர் வேலுவிடம் ஒப்படைத்தது.

அதன்படி, ஆண்டாள் அழகர் கல்லுாரியை மீட்டுக் கொடுக்கவும், அனைத்து தேர்தல் செலவுகளை ஏற்கவும் தி.மு.க., ஒப்புக்கொண்டது. இதனால் மனம் குளிர்ந்துபோன பிரேமலதா, தி.மு.க.,வுடன் கூட்டணியை உறுதி செய்தார். அப்போதே, இந்த விவகாரத்தில் பா.ஜ., மேலிடம் தலையிட்டு இருந்தால், தே.மு.தி.க.,வை அ.தி.மு.க., கூட்டணிக்குள் கட்டாயம் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், பழனிசாமியை நம்பி இருந்ததால் டில்லி ஏமாற்றமடைந்தது. நிதியை ஏன் சரியாக செலவு செய்யவில்லை என பழனிசாமியிடம் டில்லி கேட்டபோது, 'மொத்த தேர்தல் செலவுக்கான நிதியில் இருந்து இதை கழித்துக்கொள்ளுங்கள்' என சமாதானம் சொன்னார்; அதையும் ஏற்றது டில்லி.

அனுபவஸ்தர்களின் கணக்கு


இந்த விவகாரத்திற்கு இடையே, மேலும் இரண்டு தவணையாக பெரும் தொகை தமிழகத்திற்கு வந்தது. இந்த மூன்று தவணைகளில் வந்த நிதியை வைத்து, 150 தொகுதிகளில் உள்ள ஒன்றரை கோடி ஓட்டுகளை எப்படியும் கவரலாம் என்பது, அ.தி.மு.க., அனுபவஸ்தர்களின் கணக்கு. தே.மு.தி.க.,வை வெளியே விட்ட பழனிசாமியை பா.ஜ., தலைமை ஏன் மீண்டும் நம்பியது என்ற கேள்வி அ.தி.மு.க.,வினர் மத்தியிலேயே உள்ளது.

இதற்கு, பா.ஜ., தரப்பினர் கூறியதாவது: என்னதான் தேசிய அளவில் பா.ஜ., பெரிய கட்சியாக இருந்தாலும், தமிழகத்தில் அ.தி.மு.க.,வுக்குதான் கட்டமைப்பு உள்ளது. மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள அ.தி.மு.க.,வினரை வேட்பாளராக்கினால், வெற்றியை வசப்படுத்தலாம் என்பது டில்லி போடும் கணக்கு. அதேபோல், பெரும் நிதியை சிறு துண்டுகளாக மாற்றும் கட்டமைப்பும் அ.தி.மு.க., விடம் தான் உள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில், தமிழக பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்ட பெரும் தொகை, கீழ்நிலை தொண்டர்கள் வரை சென்று சேராமல், பெருந்தலைகளிடமே நின்று போனதெல்லாம் டில்லி பா.ஜ., தலைமைக்கு நன்றாக தெரியும். இதனால், இம்முறைக்கான தேர்தல் செலவுகளை செய்ய வேண்டிய பொறுப்பு, அ.தி.மு.க.,விடம் ஒப்படைக்க வேண்டியதானது. எனவே, தேர்தல் நிதி விவகாரத்தில், அ.தி.மு.க.,வை நம்புவதை தவிர, பா.ஜ.,வுக்கு வேறு வழி இல்லை. இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் செலவுக்கு வைத்துக்கொள்ளலாம் என, டில்லியை சமாதானப்படுத்திய பழனிசாமி, இப்போது அதற்கும் தயங்குகிறார் என்று அ.தி.மு.க.,வினர் புலம்புகின்றனர்.

கட்சியினர் புலம்பல்


அவர்கள் கூறியதாவது: மாவட்ட செயலர்களையும் முன்னாள் அமைச்சர்களையும் செலவு செய்யச் சொல்லி தொடர்ந்து நச்சரித்து வந்தார் தலைவர். ஒரு கட்டத்தில் அவர்களும் ஓய்ந்துவிட்டனர். கட்சியில் வேட்பாளராக வேண்டி தன்னை அணுகுபவர்களிடம், '15 சி'ஆவது இருக்கிறதா? பணம் இருப்பதற்கான ஆதாரத்தை காட்டு' என்கிறார். 'பசை'யோடு இருப்பவர்களுக்கு சீட் கொடுத்தால் தான் வெற்றி வசப்படும் என்கிற தலைவரின் கணக்கு, ஒரு விதத்தில் சரிதான். ஆனால், அப்படி பார்த்து மட்டும் சீட் கொடுக்க தேவையே இல்லையே. கட்சியிடம் இப்போது நிதி தாராளமாக இருக்கிறதே.

வேட்பாளரின் பண பலம் மட்டுமே வெற்றியை உறுதி செய்யாது; தகுதியும் வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலில், ஈரோட்டில் ஆற்றல் அசோக்குமார், நாமக்கலில் தமிழ்மணி, திருப்பூரில் அருணாசலம், திருச்சியில் கருப்பையா, கன்னியாகுமரியில் பசலியான் என செல்வந்தர்களை வேட்பாளராக்கினார். ஆனாலும், அத்தனை தொகுதியிலும் தோல்வி. கன்னியாகுமரியில் அ.தி.மு.க., எப்போதும் இல்லாத அளவுக்கு குறைவான ஓட்டுகளைப் பெற்று டிபாசிட்டை பறிகொடுத்தது. இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.

மொத்தம் 169 இடங்களில் நிற்க அ.தி.மு.க., தயாராகி விட்டது. அதற்கான வேட்பாளர்களையும் பழனிசாமி இறுதி செய்து அறிவித்துவிட்டார். அதில், வசதி படைத்த பல புதுமுகங்களை பழனிசாமி தேர்வு செய்துள்ளார். அதேபோல், தகுதி இருந்தும் செலவு செய்ய முடியாத நிலையில் இருக்கும் 52 நல்ல வேட்பாளர்களை பழனிசாமி கழித்துக்கட்டி இருக்கிறார் என்று, அ.தி.மு.க., மூத்த தலைவர்கள் சிலர் புலம்புகின்றனர். இதெல்லாம் தெரிந்தும், கிடைத்த நிதியை எடுத்து செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துக்கு பழனிசாமி வரவில்லை.

கசிந்த தகவல்


கூட்டணி சார்பில் போட்டியிடக்கூடிய அனைத்து வேட்பாளர்களும் தொகுதிகளில் செலவு செய்ய வேண்டிய அனைத்துக்கும் டில்லி ஆசிர்வதித்த பின்பும், அதற்கான காரியங்களில் இறங்காமல், தன்னுடைய கையை இறுக்கமாக மூடிக்கொண்டது ஏன் என்பது புரியாமல், டில்லி பா.ஜ., தலைமை தவித்துக் கொண்டிருந்தது.

‛ரிஸ்க்' வேண்டாம்


கடைசியாக, சமீபத்தில், பழனிசாமியிடம் நேரடியாகவே கேட்டு விட்டனர். அதற்கு, அவர், 'பா.ஜ., ஏற்பாடு செய்து கொடுத்த பெரும் தொகை குறித்த தகவல்கள் அனைத்தும் தி.மு.க.,வுக்கு தெரிந்து விட்டது. அவர்கள் சார்பாக இன்றும் தமிழக அரசில் இருக்கும் அதிகாரிகள், அ.தி.மு.க.,வை நோக்கி கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கின்றனர்.

அதனால், ரிஸ்க் எடுத்து நிதியை வெளியே எடுக்க முடியவில்லை. அவசர கதியில் வெளியே எடுத்தால், 2016ல் ஜெயலலிதா கன்டெய்னர் சிக்கியது போல, சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. சமயம் பார்த்து நிதி வெளியே எடுக்கப்படும். உரிய தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படும்' என மிக வித்தியாசமாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அ.தி.மு.க., தரப்பின் இந்த பதிலை பா.ஜ., தரப்பு முழுமையாக நம்பவில்லை. கொடுத்த நிதியை எப்படியாவது எடுத்து, தேர்தலுக்கு செலவு செய்ய வைக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனையில் உள்ளனர். இந்த நிதி விவகாரம், கூட்டணியின் அனைத்து மட்டங்களிலும் தெரிந்து விட்டதால், அ.தி.மு.க., தரப்பு எப்போது நிதியை வெளியே எடுக்கும் என காத்திருக்கின்றனர். தாமதமானால், இந்த விவகாரத்தில் வழக்கம் போல் அமித் ஷா தலையிடுவார் என்கின்றனர் இரு கட்சியினரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us