நெல்லை வந்தே பாரத் ரயில் குமரியில் இருந்து இயக்கப்படுமா?
நெல்லை வந்தே பாரத் ரயில் குமரியில் இருந்து இயக்கப்படுமா?
ADDED : அக் 26, 2024 08:27 PM
சென்னை:திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும், 'வந்தே பாரத்' ரயிலை, கன்னியாகுமரியில் இருந்து இயக்க, பயணியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினரும், குமரி மாவட்ட ரயில் பயணியர் சங்கத் தலைவருமான ஸ்ரீராம் கூறியதாவது:
மதுரை - கன்னியாகுமரி இடையே நடந்து வந்த இரட்டை ரயில் பாதை பணிகள் முடிந்துள்ளன. எனவே, பயணியரின் தேவைக்கு ஏற்ப, ரயில்களை அதிகரித்து இயக்க வேண்டும். சென்னையில் இருந்து திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் இடையே இயக்கப்படும், வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
திருநெல்வேலியில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், சென்னைக்கு மதியம் 2:00 மணிக்கே செல்கிறது. இதனால், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, சென்னைக்கு பகலில் செல்ல வசதியாக இருக்கிறது.
இந்த ரயிலை, கன்னியாகுமரியில் இருந்து காலை 5:00 மணிக்கு இயக்கினால், அந்த மாவட்ட பயணியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கும், ரயில்வே அமைச்சருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.