மக்களுக்காக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்:- நடிகர் விஷால்
மக்களுக்காக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்:- நடிகர் விஷால்
ADDED : பிப் 08, 2024 01:55 AM

சென்னை:'இயற்கை வேறு ஏதேனும் முடிவெடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்' என, நடிகர் விஷால் தெரிவித்தார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி துவங்கியுள்ளார். அதைத்தொடர்ந்து, நடிகர் விஷாலும் புதிய கட்சி துவங்க இருப்பதாக செய்தி வெளியானது.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை:
சமூகத்தில் ஒரு நடிகனாக, சமூக சேவகனாக அந்தஸ்தும், அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்பதற்காகவே, என் ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி,மக்கள் பணி செய்து வருகிறோம்.
நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து, மக்கள் பணி செய்தது இல்லை. 'நன்றி மறப்பது நன்றன்று' என்ற வள்ளுவரின் வாக்குப்படி, என்னால் முடிந்த உதவிகளை செய்தபடியே இருப்பேன்.
வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக குரல் கொடுக்க தயங்கமாட்டேன்.
இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

