விஜயை கூட்டணிக்கு பழனிசாமி அழைப்பதா? தினகரன் ஆவேசம்!
விஜயை கூட்டணிக்கு பழனிசாமி அழைப்பதா? தினகரன் ஆவேசம்!
ADDED : அக் 19, 2025 02:06 AM

சென்னை: அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அளித்த பேட்டி:
தமிழக அரசையும் ஆளும் தரப்பையும் விமர்சிப்பது போல, சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புவதும், அதற்கு ஆளும் தரப்பில் அமைச்சர்கள் பதில் அளிப்பதும் வேடிக்கையான நிகழ்வாக உள்ளது.
எல்லாருமாக சேர்ந்து மக்களை முட்டாள்கள் ஆக்குகின்றனர் என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது. ஜாதி பாகுபாட்டின் அடிப்படையில் நடக்கும் ஆணவ கொலைகளைத் தடுக்கும் நோக்கோடு, தமிழகத்தில் தனி சட்டம் கொண்டு வந்திருப்பது வரவேற்புக்குரியது.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன், ஏராளமான வாக்குறுதிகளை அள்ளிவிட்டு ஆட்சி பொறுப்புக்கு வந்த தி.மு.க., கடந்த நான்கு ஆண்டுகளில் எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அதனால், வரும் தேர்தலுக்குள் விரைந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
துாய்மைப் பணியாளர்கள், தங்கள் உரிமைகளுக்காக போராடுகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் துாய்மை பணியாளர்களை கைது செய்வது சரியான நடவடிக்கை அல்ல.
வரும் தேர்தலுக்கு, விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. அதனால், தமிழகத்தில் நான்கு முனை போட்டி அமையும். அ.தி.மு.க., பழனிசாமி தன் கூட்டங்களுக்கு, தானே ஏற்பாடு செய்தவர்களைப் பார்த்து, வெற்றிக் கூட்டணி அமைந்து விட்டது என பேசுகிறார்.
அதாவது, த.வெ.க., கொடியோடு இருப்பவர்களைப் பார்த்துத்தான் அப்படி பேசி, விஜயை மறைமுகமாகக் கூட்டணிக்கு அழைக்கிறார். அந்தளவுக்குத்தான் அ.தி.மு.க.,வை பழனிசாமி வழிநடத்துகிறார்.
இவ்வாறு தினகரன் கூறினார்.