ADDED : நவ 09, 2025 12:50 AM

சென்னை: பா.ம.க., தலைவர் அன்பு மணியின் மகள் சங்கமித்ராவுக்கு பிறந்த குழந்தையை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பார்க்க வருவாரா என்ற எதிர்பார்ப்பு அவரது குடும்பத்தினரிடையே ஏற்பட்டுள்ளது.
பா.ம.க., தலைவர் அன்புமணியின் இரண்டாவது மகள் சங்கமித்ரா. லோக்சபா தேர்தலில் அன்புமணி, தர்மபுரியில் போட்டியிட்ட போதும், அவருடைய மனைவி சவுமியா போட்டியிட்ட போதும், அவர்களுக்காக தர்மபுரி தொகுதியில் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு, தன் குடும்ப விசுவாசத்தைக் காட்டியவர் சங்கமித்ரா.
சினிமா துறையின் மீது அதீத ஆர்வம் கொண்ட அவர், சினிமா படம் ஒன்றை தயாரித்தார். பா.ம.க., கொள்கைகளில் முரண்பாடு கொண்ட நடிகர் ரஜினியை சந்தித்து, தன் சினிமா முயற்சிக்காக வாழ்த்து பெற்றார். இது, பா.ம.க., தரப்பில் முணுமுணுப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கடந்த ஓரண்டுக்கு முன், தாத்தா ராமதாஸ் தலைமையில் திருமணம் செய்த சங்கமித்ராவுக்கு, நேற்று முன் தினம் பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்பா அன்புமணிக்கும், தாத்தா ராமதாசுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், ராமதாஸ் தன்னையும் குழந்தையையும் வாழ்த்த வருவார் என்ற எதிர்பார்ப்பில் சங்கமித்ரா காத்திருப்பதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.
ஒருவேளை, சங்கமித்ராவை வாழ்த்த ராமதாஸ் நேரில் வருகை தரும்பட்சத்தில், குடும்பத்தில் நிலவும் மோதலுக்கு தீர்வு ஏற்படலாம் என்றும் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

