ஏ.டி.எம்.,மில் ரூ.500 வராதா? வதந்திகளுக்கு அரசு விளக்கம்
ஏ.டி.எம்.,மில் ரூ.500 வராதா? வதந்திகளுக்கு அரசு விளக்கம்
ADDED : ஜூலை 15, 2025 09:32 PM
புதுடில்லி:'ஏ.டி.எம்.,களில் வரும் செப்டம்பர் முதல், 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்காது என, பரவிய தகவல் முற்றிலும் தவறானது; போலியானது' என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஐநுாறு ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து படிப்படியாக விலக்கிக்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் ஏ.டி.எம்.,மில், 500 ரூபாய் நோட்டுகள் வைப்பதை தவிர்க்குமாறு வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளதாகவும், செப்டம்பர் மாதம் முதல் ஏ.டி.எம்.,மில், 500 ரூபாய் வெளிவராது என்றும், வாட்ஸாபில் தகவல் பரவியது.
இதுகுறித்து, அரசின் பொதுத்தகவல் அமைப்பான, பி.ஐ.பி., தரப்பில் உண்மை அறியும் சோதனை நடத்தப்பட்டது. ஏ.டி.எம்.,மில், 500 ரூபாய் கிடைக்காது என்ற தகவல் பொய்யானது, போலியானது என, அது தெரிவித்துள்ளது.
மேலும், 500 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதை, மத்திய நிதி அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

