‘அண்ணன் சீர்’ திட்டத்திற்கு பட்டுப்புடவை கோ – ஆப்டெக்ஸில் கொள்முதல் செய்யப்படுமா?
‘அண்ணன் சீர்’ திட்டத்திற்கு பட்டுப்புடவை கோ – ஆப்டெக்ஸில் கொள்முதல் செய்யப்படுமா?
UPDATED : நவ 19, 2026 07:04 PM
ADDED : நவ 19, 2026 07:04 PM
சென்னை: ‘அண்ணன் சீர்’ திட்டத்தில், பட்டுப்புடவை கொள்முதல் ஆர்டரை, கோ -– ஆப்டெக்ஸ் நிறுவனம் எதிர்பார்ப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தால், ‘அண்ணன் சீர்’ திட்டம் செயல்படுத்தப்படும் என, சட்டசபை தேர்தலின்போது, த.வெ.க., சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதன்படி, ஆட்சி அமைந்ததும், ‘அண்ணன் சீர்’ திட்டத்தின் கீழ், திருமணமாகும் பெண்களுக்கு, எட்டு கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
த.வெ.க., அரசு பொறுப்பேற்று, ஆறு மாதங்கள் கடந்த நிலையில், ‘அண்ணன் சீர்’ திட்டத்திற்கு, 812 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இத்திட்டத்திற்கு வழங்க வேண்டிய தங்க நாணயத்தை, தனியார் நகைக் கடைகளில் இருந்து கொள்முதல் செய்ய, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆனால், பட்டுப்புடவை எங்கு கொள்முதல் செய்வது என்பதில், குழப்பம் நீடித்து வருகிறது. தனியார் துணிக் கடைகளில் இருந்து, பட்டுப் புடவைகளை, ‘டெண்டர்’ வழியே கொள்முதல் செய்யலாம் என, சில அதிகாரிகள், முதல்வர் விஜய்க்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.
ஆனால், நெசவாளர்கள் கூட்டுறவு நிறுவனமான, கோ – ஆப்டெக்ஸ் வாயிலாக பட்டுபுடவைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, கோ – ஆப்டெக்ஸ் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
கோ – ஆப்டெக்ஸ் நிறுவனம், நாட்டில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இதன் வாயிலாக, மாநிலம் முழுதும் உள்ள நெசவாளர்களின், பொருளாதார மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
‘அண்ணன் சீர்’ திட்டத்திற்கான பட்டுப் புடவைகளை, கோ – ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் கொள்முதல் செய்தால், கைத்தறி நெசவாளர்களுக்கு, ஆண்டு முழுதும் தொடர்ச்சியாக ‘ஆர்டர்’ கிடைக்கும்.
நடப்பாண்டு விற்பனை மந்தமாக உள்ளது. இதனை சரிசெய்ய, கோ – ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு பட்டுப்புடவை ஆர்டரை அரசு வழங்க வேண்டும்.
சாமுத்ரிகா பட்டுக்கு இணையாக, காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருப்புவனம் பட்டு சேலைகள், கோ – ஆப்டெக்ஸ் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
