தேனியில் மாதம் 2 முறை தங்குவேன்: உதயநிதி வாக்குறுதி
தேனியில் மாதம் 2 முறை தங்குவேன்: உதயநிதி வாக்குறுதி
ADDED : மார் 24, 2024 02:11 PM

தேனி: ‛தேனி தொகுதியில் தங்கதமிழ்செல்வனை 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால், நான் மாதத்திற்கு 2 முறை தேனியில் தங்கி மக்களின் குறைகளை தீர்த்து வைப்பேன்' என, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி வாக்குறுதி அளித்து, பேசினார்.
தேனி பங்களாமேட்டில் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வனுக்கு ஓட்டு சேகரித்து, அவர் பேசியதாவது: கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுச்சேரி 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஆனால் ஒரே ஒரு தொகுதியில் மட்டும், வெற்றி வாய்ப்பை இழந்தோம். இம்முறை அதனை ஈடுகட்ட, அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் தேனி தொகுதியில் வெற்றி பெற வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வந்து செல்லும் பிரதமர் என்ன செய்தார். தமிழகம் வரும் அவர் தமிழ் தமிழ் என்று பேசுவார். திருக்குறள் பேசுவார். அது பாதி பேருக்கு புரியவும் புரியாது. இந்த பிரசாரத்தின் நோக்கமே 'மாநில உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல்' என்பதுதான். சி.ஏ.ஜி., 6 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கு வெளியிடும். அதில் மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் செய்த ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு வரவு செலவு கணக்கு காண்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பணம் எங்கு போனது என யாருக்கும் தெரியவில்லை.
தேனி தொகுதியில் தங்கதமிழ்செல்வனை 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால், நான் மாதத்திற்கு 2 முறை தேனியில் தங்கி மக்களின் குறை தீர்தது வைப்பேன். இவ்வாறு உதயநிதி பேசினார்.

