த.வெ.க.,வா; மீண்டும் அ.தி.மு.க.,வா? குழப்பத்தில் தவிக்கும் பன்னீர்செல்வம்
த.வெ.க.,வா; மீண்டும் அ.தி.மு.க.,வா? குழப்பத்தில் தவிக்கும் பன்னீர்செல்வம்
UPDATED : நவ 29, 2025 01:22 AM
ADDED : நவ 29, 2025 01:07 AM

மீண்டும் அ.தி.மு.க., வுக்கு செல்வதா அல்லது தமிழக வெற்றிக் கழகம் செல்வதா என்ற குழப்பத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் இருப்பதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், த.வெ.க., தலைவர் விஜய் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்துள்ளார். அவரை தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் அதிருப்தியாக இருக்கும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், மாநில நிர்வாகி கள் சிலருக்கும், செங்கோட்டையன் தரப்பில் இருந்து வலை வீசப்படுகிறது.
இந்நிலையில், செங்கோட்டையன் அழைத்தால், த.வெ.க .,வுடன் கூட்டணி அமைக்கலாம் என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படும் அணியின் தரப்பில் ஆலோசிக்கப்படுகிறது.
ஆலோசனை
சமீபத்தில், சென்னையில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், தன் ஆதரவாளர்களிடம் எழுத்துப்பூர்வமாக, கூட்டணி குறித்த கருத்துகளை, பன்னீர்செல்வம் கேட்டு பெற்றுள்ளார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசுகையில், ''ஒரு மாதத்தில் அ.தி.மு.க., ஒன்றிணையவில்லை என்றால், புதிய வியூகம் அமைத்து, தனி கட்சியாக செயல்படுவோம்,'' என்றார்.
இந்நிலையில், கூட்டணி தொடர்பாக, மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனிடம், பன்னீர்செல்வம் ஆலோசனை கேட்டுள்ளார்.
பரிசீலனை
அதாவது, ஒரு பக்கம், அ.தி.மு.க.,வில் இணைவதற்காக, ஒரு மாதம் கெடு விதித்துஉள்ளனர். மறுபக்கம், த.வெ.க.,வுடன் கூட்டணி வாய்ப்புகளையும், பன்னீர்செல்வம் பரிசீலித்து வருகிறார்.
அடுத்த மாதம், 15ம் தேதி, தங்கள் தரப்பு மாவட்ட செயலர்கள் கூட்டத்தை மீண்டும் கூட்டி, இறுதி முடிவு எடுக்க உள்ளார்.
- நமது நிருபர் -

