ADDED : மே 28, 2025 12:15 AM

சென்னை:போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சில், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்பதில், நிர்வாகம் பாகுபாடு காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து, ஓராண்டுக்கு மேலாகியும், 15வது புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.
அது தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சு, சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இதற்கு, 84 தொழிற்சங்கங்கள் அழைக்கப்பட்டுள்ளன.
தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த, தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., - அ.தொ.பே., தொழிற்சங்கங்களுக்கு மட்டும் தலா இரண்டு பேர் பங்கேற்க அனுமதி தரப்பட்டுள்ளது.
மற்ற தொழிற்சங்கங்களுக்கு தலா ஒருவருக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டுள்ளது. இது, தொழிற்சங்கங்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலர் ஆறுமுகம் கூறியதாவது:
இதற்கு முன் நடந்த இரண்டாம் கட்ட பேச்சில், ஏ.ஐ.டி.யு.சி., - ஐ.என்.சி.யு.சி., போன்ற 13 மத்திய தொழிற்சங்கங்களுக்கு தலா இரண்டு பேர் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, மூன்று சங்கங்களுக்கு மட்டுமே இருவர் அனுமதி.
மற்ற சங்கங்கள் சார்பில் ஒருவர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. இது, தொழிலாளர்கள் மத்தியில் பாரபட்சத்தை ஏற்படுத்தும்.
தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்பதில் பாகுபாடு காட்டப்படுகிறது. முத்தரப்பு பேச்சில், தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவே கருதுகிறோம்.
எனவே, கூடுதல் நிர்வாகிகளை அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து, நிர்வாகத்துக்கு கடிதமும் அனுப்பி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

