ADDED : செப் 20, 2024 01:36 AM
சென்னை,:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 70க்கும் மேற்பட்டோர் பலியானோர் வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுக்களின் மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 70க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள், பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அ.தி.மு.க., நிர்வாகிஇன்பதுரை சார்பில், மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி; பா.ம.க., பாலு சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா; பா.ஜ., வழக்கறிஞர் மோகன்தாஸ் சார்பில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் வழக்கறிஞர் மணி உள்ளிட்டோர் வாதாடினர்.
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் நேற்று ஆஜராகி, போலீஸ் அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' மற்றும் எஸ்.பி., மீதான சஸ்பெண்ட் ரத்து உள்ளிட்டவை குறித்து, முதல் அமர்வு ஏற்கனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
புகார் வந்ததும் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதிக்கும்படியும் கோரினார்.
அ.தி.மு.க., நிர்வாகி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, ''போலீசாருக்கு எதிராக குற்றம் சாட்டப்படுகிறது. இதற்குமுன் நடந்த கள்ளச்சாராய மரண சம்பவங்களிலும், பெரும்பாலோர் விடுதலை ஆகியுள்ளனர்.
''எனவே, இதுபோன்ற சம்பவம் மீண்டும் ஏற்படாமல் தடுக்க, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றுவதே சரியாக இருக்கும்,'' என்றார்.
இவ்வழக்கில், இரு தரப்பிலும் வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிவுற்ற நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்து, முதல் அமர்வு உத்தரவிட்டது.