குடியரசு தினத்தில் முதல்வர் அறிவிப்பு வருமா ? அரசு மருத்துவர்கள் காத்திருப்பு
குடியரசு தினத்தில் முதல்வர் அறிவிப்பு வருமா ? அரசு மருத்துவர்கள் காத்திருப்பு
ADDED : ஜன 25, 2025 10:13 AM

சென்னை: நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள மருத்துவர்களின் கோரிக்கை குடியரசு தினத்திலாவது நிறைவேறுமா என அரசு மருத்துவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு (LCC) தலைவர் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜனவரி 26 ம் தேதி குடியரசு தினத்தன்று கொரோனா பேரிடரில் பணியாற்றி, உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு, அரசு வேலைக்கான ஆணையை வழங்க தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்:
1) கொரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என எதிர்கட்சி தலைவராக இருந்த போது திரு. மு.க. ஸ்டாலின் முந்தைய அரசை வலியுறுத்தினார். ஆனால் முதல்வராக பதவியேற்ற பிறகு மறைந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு 10 காசு கூட நிவாரணம் தரவில்லை.
2) அதைப்போல மறைந்த மருத்துவர் விவேகானந்தன் மனைவி அரசு வேலை கேட்டு தன் குழந்தைகளுடன் 3 முறை சுகாதாரத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வேண்டினார். ஆனால் ஒரு வாரத்திற்குள் நிவாரணமும், அரசு வேலையும் தரப்படும் என உறுதியளித்த அமைச்சர் இதுவரை தரவில்லை.
3) மது போதையில் இருந்து விடுபடுபவர்களுக்கு எல்லாம் அரசு வேலை தரப்படும் என நம் அமைச்சர் பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் தன்னுடைய துறையில் மக்கள் உயிரை காப்பாற்ற போராடி மாண்ட மருத்துவரின் குடும்பத்துக்கு அரசு வேலை தரப்பட அமைச்சர் இதுவரை அக்கறை காட்டவில்லை.
4) மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு உடனே அரசு வேலை தரப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றமே அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இன்னமும் அந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்கவில்லை.
5) இதற்கிடையே கடந்த தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை தரப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ வானதி சீனிவாசன் அரசை வலியுறுத்தி பேசினார். அப்போது அதற்கு பதிலளித்து அமைச்சர் பேசியது ஒட்டுமொத்த மருத்துவர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.
6) அதாவது மறைந்த மருத்துவர் விவேகானந்தனுக்கு இரண்டு மனைவிகள் என்றும், அவரது குடும்பத்தில் பிரச்சினைகள் இருப்பதாகவும், அதனால் தான் அரசு வேலை தர முடியவில்லை என்றும் முற்றிலும் தவறான தகவலை அமைச்சர் தெரிவித்தார். அமைச்சர் கொடுத்த வாக்கை காப்பாற்றாத நிலையில், மறைந்த மருத்துவர் குறித்து அவதூறாக பேசியது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருந்தது.
7) திமுக ஆட்சி அமைந்த பிறகு நான்கு சுதந்திர தினங்கள் கொண்டாடப்பட்டுள்ளது. 4வது முறையாக குடியரசு தினம் வர இருக்கிறது. இந்த தினங்களில் எத்தனையோ தியாகிகளையும், சாதனையாளர்களையும் முதல்வர் கௌரவப்படுத்தி வருகிறார்கள்.
8) அதுவும் கொரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழக்கும் அரசு மருத்துவர்களுக்கு ராணுவ வீரர்களுக்கு இணையான மரியாதை வழங்கப்படும் என அன்று பேசப்பட்டது. ஆனால் இங்கோ மறைந்த மருத்துவரை அவமதிப்பதையும், அவரது குடும்பத்தை காயப்படுத்தி, கண்ணீர் சிந்த வைப்பதையும் பார்க்கிறோம்.
9) இருப்பினும் கொரோனா பேரிடரில் பணியாற்றி, உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் குடும்பம் வேதனைப்படுவதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது. நிச்சயம் இதை முதல்வர் விரும்ப மாட்டார்கள் என நம்புகிறோம்.
10) எனவே தமிழக முதல்வர் ஜனவரி 26 ம் தேதி குடியரசு தினத்தன்று, அரசு மருத்துவர்களின் நலனுக்கான முதல் அறிவிப்பாக, வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பாக
1. அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கிட ஆணையிட வேண்டுகிறோம். மேலும் அன்றைய தினம் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணையை முதல்வர் தன் கைகளால் வழங்க வேண்டுகிறோம். இவ்வாறு டாக்டர் பெருமாள்பிள்ளை கூறியுள்ளார்.