மக்கள் மருந்தகத்தை பின்பற்றி முதல்வர் மருந்தகம் செயல்படுமா?
மக்கள் மருந்தகத்தை பின்பற்றி முதல்வர் மருந்தகம் செயல்படுமா?
ADDED : ஜூலை 15, 2025 09:30 PM
சென்னை:'மத்திய அரசின் மக்கள் மருந்தகம் போன்று, முதல்வர் மருந்தகத்திலும், 2,000க்கும் மேற்பட்ட மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும்' என, முதல்வர் மருந்தகம் தனிநபர் தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, அதன் நிர்வாகிகள், தலைமை செயலகத்தில் முதல்வர் அலுவலகம், துணை முதல்வரின் செயலர் பிரதீப் யாதவ், கூட்டுறவு துறை பதிவாளர் நந்தகோபால் உள்ளிட்டோரை சந்தித்து மனு அளித்தனர்.
அதன்பின், கூட்டமைப்பின் தலைவர் அன்பழகன் கூறியதாவது:
பொது மக்களின் மருந்து செலவை பெருமளவு குறைக்கும் வகையில், தமிழகம் முழுதும் முதல்வர் மருந்தகம் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை பொது மக்களிடம் எடுத்துச் செல்வதில், தனிநபர் தொழில் முனைவோரான எங்களின் பங்கு மிகவும் அதிகம்.
நஷ்டம் ஏற்படாமல், மருந்தகங்களை தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது. இதற்காக, மருந்துகளின் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும்.
மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தில், 2,000க்கும் மேற்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல, முதல்வர் மருந்தகத்திலும் விற்பனை செய்ய வேண்டும்.
மருந்து விற்பனைக்கான லாப சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டும். மருந்தாளுனர் சம்பளம், கடை வாடகை என, மாதம் 15,000 ரூபாயை, அரசு வழங்க வேண்டும்.
மருந்தகத்திற்கு அனுப்பிய மருந்துகளில், விற்க முடியாதவற்றை திரும்ப பெற வேண்டும். மாவட்ட மருந்து கிடங்கில் இல்லாத மருந்துகளை, வாடிக்கையாளர்களின் அவசர தேவைக்காக வெளியில் கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.
மாநில அளவிலான மருந்து கொள்முதல் குழுவில், தனிநபர் தொழில் முனைவோர் இருவரை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.