புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்கை கருத்து கூற அவகாசம் நீட்டிக்கப்படுமா?
புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்கை கருத்து கூற அவகாசம் நீட்டிக்கப்படுமா?
ADDED : மே 15, 2025 12:56 AM

சென்னை: தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்கையை உருவாக்க, பல்வேறு சங்கங்களிடம் மின் வாரியம் கருத்து கேட்டுள்ளது.
இது தொடர்பாக, நேற்று முன்தினம் மின்னஞ்சல் அனுப்பப்பட்டு, இன்று கருத்து தெரிவிக்குமாறு அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
இதை நீட்டிக்குமாறு மின் வாரியத்திற்கு, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.
தமிழகத்தில், புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை மேம்படுத்துவதற்கு, ஏற்கனவே உள்ள பல்வேறு கொள்கைகளை ஒருங்கிணைத்து புதிய கொள்கை வெளியிட, அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து கேட்டு, பல சங்கங்களுக்கு மின் வாரிய மரபுசாரா பிரிவு தலைமை பொறியாளர், நேற்று முன்தினம் மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்.
அதில், 'புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை ஊக்குவிக்க, ஒருங்கிணைந்த கொள்கை தயாரிப்பு தொடர்பாக, இம்மாத இறுதியில் கூட்டம் நடக்க உள்ளது. இதை உருவாக்குவது தொடர்பாக தங்களின் கருத்து, பரிந்துரைகளை, 15ம் தேதி அல்லது அதற்கு முன் அனுப்பவும்' என, கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர் சங்க முதன்மை ஆலோசகர் கே.வெங்கடாசலம் கூறியதாவது:
ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்கையானது, பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்து வடிவமைத்தால் மட்டுமே, அந்த துறையில் தமிழகம் மீண்டும் முதன்மை மாநிலமாக இருக்க வழிவகுக்கும்.
பிற மாநிலங்களின் புதுப்பிக்கத்தக்க கொள்கைகளை ஒப்பிட்டு பார்த்து கருத்து கூற, குறைந்தபட்சம் ஒரு வாரம் அவகாசம் தேவைப்படுவதால், காலக்கெடுவை வரும், 22ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று, மின் வாரியத்திடம் வலியுறுத்தப் பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.