ஈரப்பதம் அளவை 22 சதவீதமாக உயர்த்த கோரிக்கை; சரியான முறையில் பாதுகாக்குமா அரசு?
ஈரப்பதம் அளவை 22 சதவீதமாக உயர்த்த கோரிக்கை; சரியான முறையில் பாதுகாக்குமா அரசு?
ADDED : அக் 22, 2025 01:41 AM

சென்னை: 'கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை, 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்' என, மத்திய உணவுத் துறையிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு, 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்துள்ளது. மற்ற மாவட்டங்களில், 13 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி நடந்துள்ளது.
இதனால், நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது. அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, நெல் கொள்முதல் துவங்கி நடந்து வருகிறது. பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில், செறிவூட்டப்பட்ட அரிசியை கலப்பதற்கான அனுமதி வழங்காமல், மத்திய அரசு காலம் தாழ்த்தியதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், கொள் முதல் செய்யப்பட்ட நெல், அரவை செய்யப்படாமல், கிடங்குகள் மற்றும் அரிசி ஆலைகளில் குவித்து வை க்கப்பட்டு உள்ளன.
டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கொள்முதல் நிலையங்களில், 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மழை காரணமாக, நெல்லின் ஈரப்பதம் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. ஈரப்பதம் அதிகம் இருப்பதாக கூறி, கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை, அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
அதனால், நெல்லின் ஈரப்பதத்தை, 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என, மத்திய உணவுத் துறைக்கு, தமிழக உணவுத் துறை வாயிலாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தற்போது, டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால், நெல்லின் ஈரப்பத அளவு அதிகரித்துள்ளது. எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை வாங்க, மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது.
இந்த அனுமதி கிடைத்தால், அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்து, நேரடியாக ஆலைகளுக்கு அனுப்ப வசதியாக இருக்கும் என, வாணிப கழக அதிகாரிகள் சொல்கின்றனர்.
அதேநேரத்தில், 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்து, திறந்தவெளியில் அடுக்கி வைத்திருக்கும் மூட்டைகளை கூட, மழையில் நனையாதபடி பாதுகாக்க முடியாத நிலை நீடிப்பதாக, விவசாயிகள் குறை கூறுகின்றனர்.
இச்சூழலில், ஈரப்பதம் அளவை 22 சதவீதமாக உயர்த்தினால், அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். அப்படி இருக்கும்போது, அந்த நெல்லை எப்படி பாதுகாக்க போகின்றனர் என்றும், விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
காவிரி பாசன மாவட்டங்களில், குறுவை பருவ நெல் கொள்முதலில் நடக்கும் குளறுபடிகளை, பலமுறை சுட்டிக்காட்டியும், அவற்றை சரிசெய்யவில்லை. பருவமழைக்கு முன் நெல்லை கொள்முதல் செய்யுங்கள்; நெல் ஈரப்பத வரம்பை, 25 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுங்கள் என பல முறை வலியுறுத்தியும், அதை செய்யாமல், விவசாயிகளுக்கு அரசு துரோகம் செய்துள்ளது. - அன்புமணி, பா.ம.க., தலைவர்