நாகை - திருத்துறைப்பூண்டி வழித்தட ரயில் பாதை பணி புத்துயிர் பெறுமா?
நாகை - திருத்துறைப்பூண்டி வழித்தட ரயில் பாதை பணி புத்துயிர் பெறுமா?
ADDED : பிப் 11, 2025 05:38 AM

நாகப்பட்டினம்: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் கொண்டு வரப்பட்ட நாகை - திருத்துறைப்பூண்டி புதிய அகல ரயில் பாதை திட்டம், பாதியில் கிடப்பில் போடப்பட்டதால் கானல் நீராகிப் போனது.
தமிழகத்தில், 1996ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், நாகையில் இருந்து திருக்குவளை வழியாக திருத்துறைப்பூண்டிக்கு புதிய அகல ரயில் பாதை அமைக்க, அப்போதைய மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று, திட்டமும் அறிவிக்கப்பட்டது.
கடந்த, 2009 பிப்., 27ம் தேதி, நாகை - திருத்துறைப்பூண்டி புதிய அகல ரயில் பாதை பணிக்கு, திருவாரூரில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் வேலு அடிக்கல் நாட்டினார்.
மொத்தம் 33.50 கி.மீ.,யில் அமைய உள்ள புதிய ரயில் பாதையில், 11 பெரிய பாலங்கள், 74 சிறிய பாலங்கள், 22 ரயில்வே கிராசிங்குகள் வருகின்றன. இந்த திட்டத்திற்கு 137.99 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டது.
நாகை வடக்கு பொய்கைநல்லுார், செம்பியன்மாதேவி, எட்டுக்குடி, திருக்குவளை, சித்தாய்மூர், திருவிடைமருதுார் வழியாக செல்லும் புதிய ரயில் தடத்தில் பாலக்குறிச்சி, திருக்குவளை, எட்டுக்குடி, செம்பியன்மாதேவி ஆகிய இடங்களில் புதிதாக ரயில்வே ஸ்டேஷன்கள் அமைகின்றன.
இந்த புதிய ரயில் தடத்தில் அமையும் லெவல் கிராசிங் பகுதிகளில், மேம்பாலம் அல்லது அன்டர் கிரவுன்ட் ரயில் போக்குவரத்து நடக்கும் வகையில் திட்டம் போடப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்தும் பணியை அடுத்து ஆற்றுப்பாலம் அமைக்கும் பணிகள் எட்டுக்குடி, திருக்குவளை, செம்பியன்மாதேவி, வடுகச்சேரி, மகாதானம், முப்பத்து கோட்டம் போன்ற சில இடங்களில் மட்டும் நடைபெற்று, பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.
கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின், பெயரளவுக்கு நடந்த பணிகள் முற்றிலுமாக கிடப்பில் போடப்பட்டன. பல இடங்களில் கட்டுமானங்கள் மண்ணில் புதைந்து, மண்மேடாக காட்சியளிக்கின்றன.
கருணாநிதியின் கனவு திட்டம் கிடப்பில் போடப்பட்டு கானல் நீர் போல் ஆகிவிட்டதாக, தி.மு.க.,வின் மூத்த தொண்டர்கள் புலம்புகின்றனர்.
எனவே, தி.மு.க., - எம்.பி.,க்கள், இந்த திட்டத்திற்கு புத்துயிர் ஊட்ட குரல் கொடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

