மார்ச் மாதம் கிடைக்காத பாமாயில் ரேஷனில் இம்மாதம் சேர்த்து தரப்படுமா?
மார்ச் மாதம் கிடைக்காத பாமாயில் ரேஷனில் இம்மாதம் சேர்த்து தரப்படுமா?
ADDED : ஏப் 01, 2025 02:41 AM
சென்னை : தாமத கொள்முதலால், ரேஷன் கடைகளில் மார்ச்சில், 40 சதவீதம் பேர் வரை பாமாயில் வாங்கவில்லை. எனவே, கடந்த மாதம் பாமாயில் வாங்காதவர்கள், இம்மாதம் சேர்த்து வழங்குமாறு, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக ரேஷன் கடைகளில், சிறப்பு பொது வினியோக திட்டத்தில், அரிசி கார்டுதாரர்களுக்கு லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும், கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.
இவற்றை, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு மாதந்தோறும் அனுப்புகிறது.
ரேஷன் கார்டுதாரர்கள் தங்களுக்கு உரிய பொருட்களை, ஒரு மாதம் வாங்கவில்லை எனில், அடுத்த மாதம் சேர்த்து வழங்கப்படாது.
இந்நிலையில், கடந்த மாதம், பாமாயில் கொள்முதலில் தாமதம் ஏற்பட்டது. அதனால், திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களில், 40 சதவீதம் கார்டுதாரர்களுக்கு பாமாயில் வினியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து, கார்டுதாரர்கள் கூறியதாவது:
ரேஷன் கடைகளில் மின்னணு எடை தராசு மற்றும் பி.ஓ.எஸ்., எனப்படும் விற்பனை முனைய கருவி ஒருங்கிணைக்கப்பட்டு, பொருட்கள் எடை போட்டு வழங்கப்பட்டன. இதனால், ஒரு கார்டுதாரருக்கே அரிசி, சர்க்கரை என, ஆறு - ஏழு முறை தனித்தனியே, 'பில்' போட்டு பொருட்கள் வழங்கப்பட்டதால், அரை மணி நேரமாகிறது.
அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால், கடந்த மாதம் சிலர் பொருட்களை வாங்கவில்லை.
பாமாயில் தாமதமாகவே வழங்கப்பட்டதால், பலருக்கு கிடைக்கவில்லை. எனவே, மார்ச்சில் பாமாயில் வாங்காதவர்களுக்கு, ஏப்ரலில் சேர்த்து வழங்க, அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.